கனமழைக்கு சிறுமி உட்பட 6 பேர் உயிரிழப்பு மரங்கள் சரிந்து வாகனங்கள் சேதம்
கனமழைக்கு சிறுமி உட்பட 6 பேர் உயிரிழப்பு மரங்கள் சரிந்து வாகனங்கள் சேதம்
ADDED : மே 22, 2025 09:40 PM

புதுடில்லி:தலைநகர் டில்லியில் நேற்று முன் தினம் இரவு, திடீரென ஏற்பட்ட புழுதிப் புயல் மற்றும் கொட்டித் தீர்த்த மழை காரணமாக, ஒன்பது வயது சிறுமி உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர். இதில், 22 வயது இளைஞர் ஒருவர் மற்றும் ஒரு மாற்றுத்திறனாளி மரம் விழுந்து உடல் நசுங்கினர். காயம் அடைந்த 11 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதேபோல, நொய்டாவில் இருவரும் உத்தர பிரதேசத்தின் குஷிநகரில் ஒரு பெண்ணும் மழைக்கு பலியாகியுள்ளனர்.
டில்லியில் நேற்று முன் தினம் காலையில் இருந்தே வெயில் சுட்டெரித்த நிலையில், இரவு திடீரென புழுதிப்புயல் ஏற்பட்டது. மேலும், இடி மின்னலுடன் மழை கொட்டியது. பல இடங்களில் ஆலங்கட்டி மழை பெய்தது.
இந்த திடீர் மழை டில்லி மாநகரை குளிவித்தாலும், பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதனால், மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மரம் விழுந்து வாகனங்கள் சேதம் அடைந்தன.
வடக்கு டில்லி பாவானா, நரேலா, ஜஹாங்கிர்புரி, சிவில் லைன்ஸ், சக்தி நகர், மாடல் டவுன், வஜிராபாத் மற்றும் திர்பூர் ஆகிய பகுதிகளில் மின்சப்ளை நிறுத்தப்பட்டது.
தென்கிழக்கு டில்லி லோதி சாலை மேம்பாலம் அருகே உயர்கோபுர மின் கம்பம் சரிந்தது.
சாலையின் நடுவில் விழுந்த மின் கம்பம், அந்த வழியாகச் சென்ற மூன்று சக்கர வண்டியில் சென்ற மாற்றுத் திறனாளி மீது விழுந்தது.
வண்டியுடன் நசுங்கிய அவர் மீட்கப்பட்டு, சப்தர்ஜங் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதை உறுதி செய்தனர்.
அதேபோல, வடகிழக்கு டில்லியின் கோகுல்புரியில் இரவு 8:15 மணிக்கு, சாலையோரத்தில் இருந்த மரம் சரிந்து விழுந்து, அதனடியில் மழைக்கு ஒதுங்கி நின்றிருந்த மவுஜ்பூர் விஜய் மொஹல்லாவைச் சேர்ந்த அசார், 22, என்ற இளைஞர் அதே இடத்தில் உடல் நசுங்கி உயிரிழந்தார்.
தயாள்பூர் நேரு விஹாரில் மாடி ஜன்னல் பெயர்ந்து விழுந்து சஹானா என்ற சாந்தினி ரத்த வெள்ளத்தில் சரிந்தார். உடனடியாக, சிவில் லைன்ஸ் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சஹானா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
முகர்ஜி நகர் பழைய நடைமேம்பால பாதுகாப்பு சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்து ஆறு பேர் காயமடைந்தனர்.
வடக்கு டில்லி காஷ்மீர் கேட் பகுதியில், மாநில தேர்தல் ஆணைய அலுவலகம் எதிரே உள்ள கட்டடத்தின் பால்கனி இடிந்து 55 வயது நபர் காயம் அடைந்தார்.
அதேபோல, மங்கோல்புரியில் ஒரு கட்டடத்தின் பால்கனி விழுந்து மூன்று ஆண்கள், ஒரு பெண் என நான்கு பேர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தில் மூன்று பைக்குகளும் சேதமடைந்தன
டில்லி மாநகரின் அனைத்து சாலைகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. டில்லி - -நொய்டா, டில்லி - -காஜியாபாத் மற்றும் டில்லி- - குருகிராம் சாலைகளில் பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து, போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
மெதுவாக ஊர்ந்து சென்ற வாகனங்கள் மீது மரங்கள் விழும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வேகமாக பரவின.
மதுரா சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார் மீது மரம் விழுந்து கார் நொறுங்கியது.
நேற்று முன் தினம் மாலை 5:30 மணியில் இருந்து இரவு 8:30 மணி வரை, மூன்று மணி நேரத்தில், சப்தர்ஜங்கில் 1.22 செ.மீ., மழை பெய்திருந்தது. மயூர் விஹார் - 13 மி.மீ., பீதாம்புரா - 5 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.
நொய்டா
நொய்டா மற்றும் கிரேட்டர் நொய்டா உள்ளிட்ட கவுதம் புத்தா நகர் மாவட்டத்திலும் இடியுடன் கூடிய மழை கொட்டித் தீர்த்தது.
கிரேட்டர் நொய்டா ஓமிக்ரான் 3வது செக்டாரில் மிக்ஷன் அல்டிமோ 21 மாடி கட்டடத்தின் கிரில் விழுந்து, 60 வயது மூதாட்டியும் அவரது நான்கு வயது பேரனும் உயிரிழந்தனர். தாத்ரியில் ஒரு மரம் விழுந்து டி.ஏ.வி., பள்ளி ஆசிரியர் அதே இடத்தில் மரணம் அடைந்தார்.
உத்தர பிரதேசம்
உத்தர பிரதேசத்தின் குஷிநகர் மாவட்டம் டோலா சியார்ஹா கிராமத்தில் கரும்புத் தோட்டத்தில் உள்ள குடிசை சரிந்து மந்தி தேவி என்ற பெண் உயிரிழந்தார்.