மும்பையை புரட்டிபோட்ட கனமழை: 2 நாட்களுக்கு 'ரெட் அலெர்ட்' எச்சரிக்கை
மும்பையை புரட்டிபோட்ட கனமழை: 2 நாட்களுக்கு 'ரெட் அலெர்ட்' எச்சரிக்கை
ADDED : ஆக 17, 2025 01:24 AM

மும்பை: மஹாராஷ்டிராவின் மும்பையில் கொட்டிய கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இருவர் பலியான நிலையில், பஸ், ரயில், விமான சேவை உள்ளிட்டவை முடங்கின. அடுத்த இரு நாட்களுக்கு அதி கனமழைக்கான 'ரெட் அலெர்ட்' எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
ஆந்திரா அருகே வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, மஹாராஷ்டிராவில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. அதன்படி, கடந்த சில நாட்களாக மும்பை, தானே உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. விட்டுவிட்டு மழை பெய்து வந்த சூழலில், நேற்று முன்தினம் நள்ளிரவு துவங்கி, நேற்று காலை வரை கனமழை கொட்டி தீர்த்தது.
மும்பையின் மேற்கு புறநகர் பகுதியில், ஐந்து மணி நேரத்தில் 21 செ.மீ., மழை பெய்தது. மும்பை நகரப் பகுதியில் 13 செ.மீ., மழை பதிவானது.
இதனால், மும்பையின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாக மாறின. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளை மழைநீர் சூழ்ந்ததால், மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இதனால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர். நகர பஸ்களும் நகர முடியாமல் ஆங்காங்கே பழுதாகி நின்றன. கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக பேருந்து சேவை முடங்கியது. மும்பை மக்களின் இதயமாக கருதப்படும், புறநகர் ரயில் சேவையும் கடுமையாக பாதிக்கப்பட்டன.
தொடர் மழை காரணமாக மும்பை விமான நிலையத்தில் விமான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
விக்ரோலியின் மேற்கு பகுதியில் கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. மலையை ஒட்டி அமைந்திருந்த குடிசை வீட்டின் மீது பாறைகள் சரிந்து விழுந்ததில் நான்கு பேர் படுகாயம் அடைந்தனர். இதில், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இருவர் உயிரிழந்தனர். காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மும்பை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில், வரும் 19ம் தேதி வரை கனமழை நீடிக்கும் என, தெரிவித்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், அடுத்த இரு நாட்களுக்கு அதி கனமழை பெய்வதற்கான ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.