பீஹாரில் கொட்டி தீர்க்கும் கனமழை; 24 மணி நேரத்தில் மின்னல் தாக்கி 19 பேர் உயிரிழந்த சோகம்!
பீஹாரில் கொட்டி தீர்க்கும் கனமழை; 24 மணி நேரத்தில் மின்னல் தாக்கி 19 பேர் உயிரிழந்த சோகம்!
ADDED : ஜூலை 17, 2025 09:25 PM

பாட்னா: பீஹாரில் கடந்த 24 மணி நேரத்தில், மின்னல் தாக்கி 19 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களது குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டு உள்ளது.
பீஹார் முழுவதும் பரவலாக மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது.கடந்த 24 மணி நேரத்தில், நாளந்தா மாவட்டத்தில் ஐந்து பேரும், வைசாலியில் நான்கு பேரும், பங்கா மற்றும் பாட்னாவில் தலா இரண்டு பேரும், ஷேக்புரா, அவுரங்காபாத், சமஸ்திபூர், நவாடா, ஜமுய் மற்றும் ஜெகனாபாத் மாவட்டங்களில் தலா ஒருவரும் உயிரிழந்து உள்ளனர்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் நிதிஷ் குமார் இரங்கல் தெரிவித்து உள்ளார். அவர், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்குமாறு அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டார்.
உயிரிழந்தவர்களில், பெரும்பாலோர் வயல்களில் நெல் நடவு செய்தவர்கள், கால்நடைகளை மேய்த்தவர்கள் அல்லது மழையிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள மரங்களுக்கு அடியில் தஞ்சம் புகுந்தவர்கள்.
மக்கள் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும். மாநில பேரிடர் மேலாண்மைத் துறை அவ்வப்போது வெளியிடும் வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் போது மக்கள் வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த பல ஆண்டுகளாக பீஹார் மாநிலத்தில் மின்னல் தாக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது, இந்த ஆண்டு மார்ச் மமாதத்திலிருந்து, இதுவரை150 பேர் உயிரிழந்துள்ளனர். 2016ம் ஆண்டு முதல் இன்று வரை மின்னல் தாக்கி, 2,600 பேர் உயிரிழந்துள்ளதாக மாநில அரசின் தரவுகள் தெரிவிக்கின்றன.