ADDED : மே 03, 2026 12:24 AM
திருவனந்தபுரம்: கேரளாவின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று கனமழை கொட்டி தீர்த்தது. இதனால், நான்கு மாவட்டங்களில் மிக கனமழைக்கான, 'ஆரஞ்சு அலெர்ட்' விடுக்கப்பட்டது.
கேரளாவில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்நிலையில், எர்ணாகுளம், திருச்சூர், இடுக்கி, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில், நேற்று கனமழை பெய்தது. இதனால், பல்வேறு சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல வழிந்தோடியது.
ஒருசில இடங்களில் முன்னெச்சரிக்கையாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் மக்கள் அவதி அடைந்தனர்.
இதையடுத்து, இந்த நான்கு மாவட்டங்களுக்கும் கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த மாவட்டங்களின் சில பகுதிகளில் இ டியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும், மணிக்கு 50 கி.மீ., வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
கேரளாவில் கோடை மழை தீவிரமடைந்துள்ள நிலையில், பொதுமக்களும் மீனவர்களும் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தப் பட்டுள்ளனர்.
