ஹெலிகாப்டர் ஊழல் வழக்கு: இடைத்தரகருக்கு ஜாமின் மறுப்பு
ஹெலிகாப்டர் ஊழல் வழக்கு: இடைத்தரகருக்கு ஜாமின் மறுப்பு
ADDED : மார் 18, 2024 08:19 PM

புதுடில்லி: ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் உள்ள இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேல் ஜாமின் மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
பிரதமர், ஜனாதிபதி உள்ளிட்ட வி.வி.ஐ.பி.,க்கள் பயணம் செய்ய ஐரோப்பிய நாடான இத்தாலியைச் சேர்ந்த 'அகஸ்டா வெஸ்ட்லேண்ட்' நிறுவனத்திடம், ஹெலிகாப்டர்கள் வாங்க, ஒப்பந்தம் போடப்பட்டதில் ரூ. 3,600 கோடி ஊழல் நடந்துள்ளதாகக் கூறி, அமலாக்கத் துறை மற்றும் சி.பி.ஐ., வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறது.
இந்த ஊழல் விவகாரத்தில், இடைத்தரகர் கிறிஸ்டியன் மிகைலை 59, 2018-ம் ஆண்டு ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துபாயில், சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்து இந்தியா கொண்டு வந்து, டில்லி திஹார் சிறையில் அடைத்தனர். அவர் மீதான வழக்கு குறித்த விசாரணை, டில்லி, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
கடந்த 2020ம் ஆண்டு தனக்கு கொரோனா தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் , இடைக்கால ஜாமின் கோரியும் டில்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி யானது.
இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு கடந்த பிப். 17-ல் தள்ளுபடி செய்யப்பட்டது. மீண்டும் தாக்கல் செய்திருந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்க மறுத்துவிட்டது.

