சுற்றுலா மையங்களுக்கு ஹெலிகாப்டர் சேவை : கேரள அரசு முடிவு!
சுற்றுலா மையங்களுக்கு ஹெலிகாப்டர் சேவை : கேரள அரசு முடிவு!
ADDED : டிச 04, 2024 08:42 PM

திருவனந்தபுரம்: கேரளாவில் உள்ள பல்வேறு சுற்றுலாத் தலங்களை ஹெலிகாப்டர் சேவை மூலம் இணைக்கும் சுற்றுலாக் கொள்கைக்கு மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
கேரளாவில் சுற்றுலாத்தலங்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளன. வெளிநாடுகளில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப்பயணிகள் விரும்பி வரும் மாநிலங்களில் ஒன்றாக கேரளா உள்ளது.
அவர்களது வசதியை கருத்தில் கொண்டு, புதிய வசதிகளை ஏற்படுத்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது. அவற்றில், சுற்றுலா மையங்களுக்கு ஹெலிகாப்டர் சேவை வசதி ஏற்படுத்துவதும் ஒன்று. இதன் மூலம், ஒரு சுற்றுலா மையத்தில் இருந்து, இன்னொரு சுற்றுலா மையத்துக்கு ஹெலிகாப்டரில் சென்று விட முடியும்.
இது தொடர்பான ஆலோசனைக்காக, கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான அமைச்சரவை குழு கூட்டம் இன்று நடந்தது. இதில், கேரளாவில் உள்ள சுற்றுலாத்தலங்களுக்கு விரைவாகவும் எளிதாகவும் செல்வதற்கு வசதியாக, ஹெலி சுற்றுலாக் கொள்கைக்கு முதல் கட்ட அனுமதி வழங்கப்பட்டது.
இதன்படி, சுற்றுலா வரும் பயணிகளின் வசதிகளுக்காக, சுற்றுலா மையங்களில் பல்வேறு உள்கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படும். ஹெலி போர்ட்ஸ், ஹெலி நிலையங்கள், ஹெலிபேடுகள் விரைவில் அமைக்கப்படும்.
இதன் மூலம், ஹெலிகாப்டர் சுற்றுலாத் துறையில் தொழில் முனைவோர் அதிகம் பேர் ஈடுபட முன் வருவர். சுற்றுலாத்துறை மேம்படும்; பயணிகளுக்கும் பேருதவியாக இருக்கும் என்று முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.