ADDED : டிச 13, 2024 11:02 PM
பெங்களூரு: பெங்களூரு நகரில், தினமும் ஆம்புலன்ஸ் 'ஒலி' கேட்காத நாளே இல்லை என்று கூறலாம். ஆனால், மிகவும் பரபரப்பான நேரங்களில், போக்குவரத்து நெரிசலில் ஆம்புலன்ஸ்கள் சிக்கி, அதில் உள்ளே இருக்கும் நோயாளியின் உயிருக்கு ஆபத்தாக முடிந்துள்ளது.
குறிப்பாக, வெளி மாவட்டங்களில் இருந்து உயர் சிகிச்சைக்காக பெங்களூரு வருவோரே அதிகம். இந்த நெரிசலை தவிர்க்க, 'பைக் ஆம்புலன்ஸ்' அறிமுகம் செய்யப்பட்டது. இந்த சேவையும், எந்தளவு பயன்படுத்தப்படுகிறது என்று தெரியவில்லை.
இந்நிலையில், அரசு மருத்துமனைகளுக்கென 'ஏர் ஆம்புலன்ஸ்' சேவையை துவக்க, மாநில சுகாதார துறை திட்டமிட்டு உள்ளது. இதற்காக, பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் 'ஹெலிபேட்' அமைக்கவும் ஆலோசித்துள்ளது.
இதன்படி, கர்நாடக வரலாற்றில், பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் ஹெலிபேட் அமைக்க திட்டமிட்டு உள்ளது. ஏற்கனவே, இங்கு 1,000 படுக்கை வசதிகள் கொண்ட கட்டடம் கட்டப்பட்டு உள்ளது.
அரசு அல்லது தனியார் கூட்டமைப்பில், ஏர் ஆம்புலன்ஸ் சேவையை துவக்க உள்ளது. ஏர் ஆம்புலன்ஸ் சேவை துவக்கப்பட்டால், நோயாளிகளின் இறப்பு விகிதம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.