மனிதாபிமான அடிப்படையில் உதவி: அமித்ஷா விடம் நேரில் கோரிக்கை வைத்த பிரியங்கா
மனிதாபிமான அடிப்படையில் உதவி: அமித்ஷா விடம் நேரில் கோரிக்கை வைத்த பிரியங்கா
ADDED : டிச 04, 2024 06:29 PM

புதுடில்லி: '' அரசியலை ஒதுக்கி வைத்துவிட்டு, வயநாடு மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்ய வேண்டும்,'' என வயநாடு தொகுதி எம்.பி., பிரியங்கா, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் நேரில் கோரிக்கை வைத்தார்.
கடந்த ஜூலை 30 ல் கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக முண்டக்கை, சூரல்மலை உள்ளிட்ட பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. 420க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 397 பேர் காயமடைந்தனர். இதனை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என கேரள அரசு கோரிக்கை விடுத்தது. இதனை மத்திய அரசு ஏற்கவில்லை.
இந்நிலையில், பார்லிமென்ட் வளாகத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, கேரள எம்.பி.,க்களுடன் சேர்ந்து வயநாடு தொகுதி எம்.பி., பிரியங்கா சந்தித்தார்.
இதன் பிறகு பிரியங்கா கூறியதாவது: பிரதமரிடமும், உள்துறை அமைச்சரிடமும் மனு அளித்துள்ளோம். வயநாடு பேரிடரில் மக்கள் அனைத்தையும் இழந்துள்ளனர். பலர் குடும்ப உறுப்பினர்களையும் இழந்துள்ளனர். இந்த சூழ்நிலையில், மத்திய அரசு தலையிடாவிட்டால், ஒட்டு மொத்த நாட்டிற்கும், குறிப்பாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு தவறான செய்தியை அனுப்பும்.
வயநாட்டில் நிலவும் சூழ்நிலை குறித்தும், மக்களின் பிரச்னைகள் குறித்தும் உள்துறை அமைச்சரிடம் தெரிவித்தோம். குறிப்பிட்ட பகுதியில் மட்டும் இயற்கை பேரிடர் ஏற்படும் போது, அதன் பாதிப்பு அதிகமாக இருக்கும். எந்த ஆதரவும் இல்லாமல் மக்கள் தவிக்கின்றனர். இதுபோன்ற சூழ்நிலையில் மத்திய அரசு செயல்படாவிட்டால், மக்கள் யாரை நம்புவார்கள்.
அரசியலை ஓரம் வைத்துவிட்டு, மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்ய வேண்டும் என நாங்கள் கோரிக்கை வைத்தோம். பேரிடரில் பாதிக்கப்பட்டவர்களை பிரதமர் மோடி சந்தித்து ஆறுதல் கூறினார். அவர்களை நான் சந்தித்த போது, பிரதமர் எங்களுக்கு உதவுவார் என, என்னிடம் நம்பிக்கை தெரிவித்தனர். ஆனால், அவர்களுக்கு இதுவரை எந்த உதவியும் கிடைக்காதது துரதிர்ஷ்டம். இவ்வாறு பிரியங்கா கூறினார்.