சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த நிக்கோபர் திட்டம்... உதவும்!சுற்றுலா துறையும் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடையும்
சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த நிக்கோபர் திட்டம்... உதவும்!சுற்றுலா துறையும் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடையும்
UPDATED : மே 02, 2026 03:40 PM
ADDED : மே 02, 2026 03:30 PM

- நமது சிறப்பு நிருபர் -
அந்தமான் நிக்கோபர் தீவுகளில், மத்திய அரசு மேற்கொள்ளும், 'கிரேட் நிக்கோபர்' திட்டம், இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த உதவும் என்றும், அந்நகரம் சுற்றுலா துறையில் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடையும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டின் உட்கட்டமைப்பு வளர்ச்சியில், 12 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு புதிய புரட்சியை பிரதமர் மோடி தலைமையிலான அரசு செய்துள்ளதாக, மத்திய அமைச்சர்கள் பெருமிதம் தெரிவிக்கின்றனர். 2014ல், 1.88 லட்சம் கோடி ரூபாயாக இருந்த மொத்த மூலதன செலவு, 2026ல், 11 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். எனினும், பல லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த பிரமாண்ட திட்டங்கள் ஒவ்வொன்றும் நிலம் கையகப்படுத்துதல், சுற்றுச்சூழல் அனுமதி, திட்ட மேலாண்மை ஆகிய காரணிகளால் சவாலை சந்தித்து வருகின்றன.
குறிப்பாக, சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதில் நிலவும் முட்டுக்கட்டையால் திட்டங்களை அமல்படுத்துவதில் தாமதம் ஏற்படுகிறது. அதனால், திட்டத்துக்கான செலவினங்களும் ஒவ்வொரு நாளும் உயர்கின்றன. திறமையான நிர்வாகம், முன்கூட்டியே திட்டமிடுதல், பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு ஆகியவற்றால் மட்டுமே, தேக்கம் அடைந்திருக்கும் வளர்ச்சி திட்டங்களை விரைவாக முடிக்க வழிவகுக்கும் என்கின்றனர் நிபுணர்கள். இதில், பெரும்பாலான உட்கட்டமைப்பு திட்டங்கள் தாமதமாவதற்கு, அந்தந்த உள்ளூர் மக்களின் போராட்டங்களே முக்கிய காரணம். தற்போது இந்த போராட்டங்களுக்கு எல்லாம் மையப்புள்ளியாக மாறி இருப்பது, 'கிரேட் நிக்கோபர் தீவு' திட்டம் தான்.
நம் நாட்டின் கடல்சார் வணிகத்தையும், பாதுகாப்பையும் பலப்படுத்த, 81,000 கோடி ரூபாய் மதிப்பில் அந்தமான் நிக்கோபர் தீவுகளின் ஒருங்கிணைந்த வளர்ச்சி கழகம் என்ற பெயரில் இந்த மெகா திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. சர்வதேச சரக்கு பெட்டக முனையம், பொதுமக்கள் மற்றும் ராணுவ பயன்பாட்டுக்கான பசுமை விமான நிலையம், புதிய நகரம், மின் உற்பத்தி நிலையம் ஆகியவை இத்திட்டத்தில் அடங்கும். குறிப்பாக, பசுமை விமான நிலையம் கட்டி முடிக்கப்பட்டால் சுற்றுலா துறை மிகப்பெரிய அளவில் வளர்ச்சி பெறும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில், கடல்சார் வணிக துறையில் நம் நாடு முக்கிய சக்தியாக உருவெடுக்கும் நோக்கில், இந்த திட்டத்தை மத்திய அரசு முன்னெடுத்துள்ளது. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுமா என்பது குறித்து, அனைத்து வகையிலும் விரிவான ஆய்வுகளை நடத்திய பிறகே மத்திய அரசு இந்த மெகா திட்டத்துக்கு பச்சைக்கொடி காட்டியுள்ளது.
குறிப்பாக, மலாக்கா ஜலசந்தியிலிருந்து, 150 கி.மீ., துாரத்தில் அமையவுள்ள இந்த திட்டம், இந்தோ- - பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தவும், சிங்கப்பூர், கொழும்பு போன்ற வெளிநாட்டு துறைமுகங்களை பெருமளவு சார்ந்திருப்பதை குறைக்கவும் உதவும் என, கூறப்படுகிறது. எனினும், பிற உட்கட்டமைப்பு திட்டங்களுக்கு ஏற்பட்டது போலவே, அந்தமான் நிக்கோபர் வளர்ச்சி திட்டத்துக்கும் எதிர்க்கட்சியிடம் இருந்து பலத்த எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.
சமீபத்தில் இந்த திட்டம் குறித்து பேசிய காங்., - எம்.பி.,யும், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல், 'நாட்டின் மிகப்பெரிய இயற்கை வளத்தை கொள்ளையடிக்கும் மாபெரும் ஊழல். வளர்ச்சி என்ற பெயரில் நடக்கும் பேரழிவு' என, குற்றஞ்சாட்டினார்.
'இத்திட்டத்தால், 160 சதுர கி.மீ., பரப்புள்ள செழுமையான காடுகள் அழிக்கப்பட்டு விடும். 10 லட்சம் மரங்கள் வெட்டப்படும். பழங்குடியின மக்களிடம் இருந்து, அவர்களின் பூர்வீக நிலங்கள் பறிக்கப்பட்டு, அதானி குழுமத்திடம் ஒப்படைக்கப்படும்' என்ற குற்றச்சாட்டையும் எதிர்க்கட்சிகள் முன்வைத்துள்ளன.
கடந்த, 2021ல் இத்திட்டத்தை, 'நிடி ஆயோக்' முன்மொழிந்ததில் இருந்தே சர்ச்சை வெடித்தது. எனினும், சுற்றுச்சூழலுக்கான ஒப்புதலை பசுமை தீர்ப்பாயம் அப்படியே உறுதி செய்தது, எதிர்க்கட்சிகளை மேலும் கொந்தளிக்க வைத்துள்ளது.
கிரேட் நிகோபர் தீவில் பல நுாற்றாண்டுகளாக வாழ்ந்து வரும், 'ஷோம்பென்' பழங்குடியினரின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் என, அஞ்சப்படுகிறது. தற்போது, 8,500 பேர் மட்டுமே வாழும் இந்தத் தீவில், திட்டம் தொடங்கப்பட்டால், 6.50 லட்சம் பேர் வெளியூர்களிலிருந்து வந்து குடியேறுவர்.
இதுவரை வெளியுலக தொடர்பே இல்லாத பழங்குடியினருக்கு புதியவர்களின் வரவால் தொற்று நோய் ஏற்படும். இதனால், அந்த இனமே அழிவதற்கு காரணமாகி விடும் என, மரபின அழிப்புக்கான காரணங்களை ஆராய்ந்து வரும் நிபுணர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
அபூர்வ வகை ஆமைகள், முதலைகள் மற்றும் அந்தமான் தீவுகளுக்கே உரிய தனித்துவமான பறவை இனங்களும் இத்திட்டத்தால் அழியும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது. 'சென்ட்ரல் விஸ்டா', புல்லட் ரயில் திட்டம், குஜராத்தின் கட்ச்சில் அமைந்து வரும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பூங்கா மற்றும் மும்பையின் ஆரே காலனி மெட்ரோ கார் ஷெட் போன்ற பல திட்டங்களுக்கு, காங்., தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருவதாக, பா.ஜ., குற்றஞ்சாட்டுகிறது.
வளர்ச்சிக்கு எதிராக முட்டுக்கட்டை போடுவதாக மத்திய அரசு கூறிக் கொள்ளட்டும். அதே சமயம், பழங்குடியினரின் உரிமை மற்றும் இயற்கை வளங்களின் பாதுகாப்பு ஆகியவற்றை அழித்து தான் வளர்ச்சியை கொண்டு வர வேண்டுமா என, எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்புகின்றன.

