தயவு செய்து தடுத்து நிறுத்துங்க... ஹேமா அறிக்கை கசிவால் சங்கடம்; நடிகைகள் கண்ணீர்!
தயவு செய்து தடுத்து நிறுத்துங்க... ஹேமா அறிக்கை கசிவால் சங்கடம்; நடிகைகள் கண்ணீர்!
ADDED : செப் 16, 2024 12:47 PM

திருவனந்தபுரம்: நடிகர்களின் பாலியல் தொந்தரவு குறித்து ஹேமா கமிட்டியிடம் புகார் அளித்த நடிகைகளின் விபரங்கள் வெளியாவதை தடுக்க வேண்டும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு பெண் கலைஞர்கள் அமைப்பினர் கடிதம் எழுதியுள்ளனர்.
கேரளாவில் ஹேமா கமிட்டி அறிக்கைக்கு பிறகு மலையாள நடிகர்கள், இயக்குனர்களுக்கு எதிரான பாலியல் புகார்கள் அதிகரித்து வருகிறது. பலர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரையில் நடிகர்கள் சித்திக், ஜெயசூர்யா, மனியன்பிள்ளை ராஜு, எடவேலா பாபு, பாபுராஜ் மற்றும் இயக்குநர் ரஞ்சித் உள்ளிட்டோர் மீது புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. இது மலையாள திரையுலகை அதிர வைத்துள்ளது.
இந்த நிலையில், ஹேமா கமிட்டியின் அறிக்கையில் சிலர் தலையிடுவதாகவும், அதன் மூலம், புகார் அளித்த நடிகைகளின் விபரங்கள் கசிவதாக சினிமா பெண் கலைஞர்கள் அமைப்பினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
இது தொடர்பாக முதல்வர் பினராயி விஜயனுக்கு அவர்கள் எழுதியுள்ள கடிதத்தில், நடிகைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தொடர்பான தகவல்களை ஹேமா கமிட்டி மற்றும் சிறப்பு விசாரணை குழுவின் முன்பு நடிகைகள் அளித்துள்ளனர். ரகசியமாக வைக்கப்பட வேண்டிய இந்தத் தகவலை, சில குறிப்பிட்ட தொலைக்காட்சி சேனல்களுக்கு கசிய விடுகின்றனர். இது நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானதாகும்.
ஏற்கனவே வந்த தகவல்களின் அடிப்படையில் யார் புகார் கூறியிருக்கிறார்கள் என்பது பற்றி பொதுவெளியில் பெரும்பாலும் தெரிந்துவிட்டது. இது சம்பந்தப்பட்டவர்களுக்கு அழுத்தத்தை கொடுத்துள்ளது. எனவே, ஹேமா கமிட்டியின் அறிக்கையில் இடம்பெற்றுள்ள தகவல்களை வெளியே விடாமல் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், எனக் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக, அண்மையில் சினிமா பெண் கலைஞர்கள் அமைப்பைச் சேர்ந்த நடிகைகள் ரேவதி, ரீமா கல்லிங்கல், இயக்குனர்கள் தீதி தாமோதரன், பீனா பால் ஆகியோர் கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.