20 சாட்சி இப்போதே தயார்; ஹேமா அறிக்கை எதிரொலி; வசமாக சிக்கிய பாலியல் குற்றவாளிகள்!
20 சாட்சி இப்போதே தயார்; ஹேமா அறிக்கை எதிரொலி; வசமாக சிக்கிய பாலியல் குற்றவாளிகள்!
UPDATED : செப் 19, 2024 08:20 AM
ADDED : செப் 19, 2024 08:11 AM

திருவனந்தபுரம்: ஹேமா கமிட்டியிடம் வாக்குமூலம் அளித்த சாட்சிகள் 20 பேரிடம், சிறப்பு புலனாய்வு குழுவினர் சாட்சியம் பெற்றுள்ளனர். இதனால் குற்றம் சாட்டப்பட்ட நடிகர்கள் மீது வழக்கு பதிந்து சட்ட நடவடிக்கை எடுக்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.
கேரளாவில் ஹேமா கமிட்டி அறிக்கைக்கு பிறகு மலையாள நடிகர்கள், இயக்குனர்களுக்கு எதிரான பாலியல் புகார்கள் அதிகரித்து வருகிறது. பலர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரையில் நடிகர்கள் சித்திக், ஜெயசூர்யா, மனியன்பிள்ளை ராஜு, எடவேலா பாபு, பாபுராஜ் மற்றும் இயக்குநர் ரஞ்சித் உள்ளிட்டோர் மீது புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. இது மலையாள திரையுலகை அதிர வைத்துள்ளது. ஹேமா கமிட்டி 3896 பக்கங்களில் தனது விசாரணை அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.இதில் வெறும் 296 பக்கங்கள் மட்டுமே வெளியாகியுள்ளது. முழு அறிக்கையும் சிறப்பு புலனாய்வு குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் வாக்குமூலம் அளித்த 20 பேரிடம், இதுவரை சாட்சிய வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.அதன் அடிப்படையில் வழக்கு பதிய சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணையை துவங்கி உள்ளது.
சாட்சிகளிடம் முதல் கட்ட விசாரணை செப்டம்பர் 30ம் தேதி முடிவடையும். இந்த விசாரணை குறித்து தகவல், அக்டோபர் 3ம் தேதி ஐகோர்ட்டில் ஹேமா கமிட்டி தொடர்பாக வழக்கு விசாரணைக்கு வரும் போது அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விரிவான சாட்சி அறிக்கைகள் மற்றும் ஆதாரங்கள் அடங்கிய முழுமையான அறிக்கை, புலனாய்வுக் குழுவில் உள்ள ஐ.ஜி., ஸ்பர்ஜன் குமார், டி.ஐ.ஜி., அஜிதா பீகம், எஸ்.பி.க்.,கள் பூங்குழலி, மெரின் ஜோசப் மற்றும் ஐஸ்வர்யா டோங்ரே ஆகியோர முழு அறிக்கையையும் மூன்று நாட்களுக்குள் ஆய்வு செய்ய உள்ளனர்.
சாட்சிகளிடம் விசாரணை நடத்த முடியவில்லை என்றால், ஹேமா கமிட்டி அல்லது மாநில கலாசார விவகாரங்கள் துறையிடம் உதவி பெற சிறப்பு புலனாய்வு குழு திட்டமிட்டுள்ளது.