அரவிந்த் கெஜ்ரிவாலை போல் விடுவிக்க ஹேமந்த் சோரன் கோரிக்கை
அரவிந்த் கெஜ்ரிவாலை போல் விடுவிக்க ஹேமந்த் சோரன் கோரிக்கை
ADDED : மே 13, 2024 09:51 PM

புதுடில்லி,: தேர்தல் பிரசாரம் செய்வதற்கு, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்கியதுபோல், தனக்கும் அளிக்க வேண்டும் என, ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் சார்பில் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவருமான ஹேமந்த் சோரன், ஜன., 31ல் கைது செய்யப்பட்டார். நிலமோசடி தொடர்பான வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டதை அடுத்து, முதல்வர் பதவியில் இருந்து அவர் விலகினார்.
மோசடி வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மனுவை, ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம், சமீபத்தில் நிராகரித்து உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து, ஹேமந்த் சோரன் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.இந்த மனு, நீதிபதிகள் சஞ்சிவ் கண்ணா, திபாங்கர் தத்தா அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கை, கோடை விடுமுறைக்குப் பின் விசாரிப்பதாக அமர்வு கூறியது.
அவசரமாக விசாரிக்கும்படி, ஹேமந்த் சோரன் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் கூறினார். வரும், 20ம் தேதிக்குப் பின் விசாரிப்பதாக அமர்வு கூறியது. ஆனால், அதற்கு முன் அவசரமாக விசாரிக்கும்படி, கபில் சிபில் வலியுறுத்தினார்.
தேர்தல்கள் முடிந்துவிடும் என்பதால் உடனடியாக விசாரிக்க வேண்டும் அல்லது மனுவை தள்ளுபடி செய்யும்படி அவர் வாதிட்டார்.
அப்போது, டில்லி மதுபான ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட, டில்லி முதல்வரும், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, பிரசாரம் செய்வதற்காக இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டதை அவர் சுட்டிக் காட்டினார். அதுபோல, ஹேமந்த் சோரனுக்கும் இடைக்கால ஜாமின் வழங்கும்படி அவர் வாதிட்டார்.இதையடுத்து, வழக்கின் விசாரணையை, 17ம் தேதிக்கு அமர்வு ஒத்திவைத்தது. அதற்குள் பதில் மனு தாக்கல் செய்ய அமலாக்கத் துறைக்கு
உத்தரவிடப்பட்டுள்ளது.