ADDED : பிப் 17, 2024 01:27 AM

ராஞ்சி, ஜார்க்கண்டில் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் இளைய சகோதரர் பசந்த் சோரன், 44, உட்பட ஏழு பேர் அமைச்சர்களாக நேற்று பதவியேற்றனர்.
பதவி பிரமாணம்
நில மோசடி வழக்கில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவரும், அம்மாநில முதல்வராக இருந்தவருமான ஹேமந்த் சோரன், சமீபத்தில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.
முதல்வர் பதவியை அவர் ராஜினாமா செய்ததையடுத்து, அந்த கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் சம்பாய் சோரன், கடந்த 2ம் தேதி முதல்வராக பதவியேற்றார்.
இந்நிலையில், ஹேமந்த் சோரனின் இளைய சகோதரரும், தும்கா சட்டசபை தொகுதி உறுப்பினருமான பசந்த் சோரன் உட்பட ஏழு பேர் நேற்று பதவி ஏற்றனர்.
அவர்களுக்கு அம்மாநில கவர்னர் ராதாகிருஷ்ணன், பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
புதிய அமைச்சர்கள்
தற்போது 12 பேர் இடம்பெற்ற அமைச்சரவையில், பசந்த் சோரன், சாய்பாசா தொகுதி எம்.எல்.ஏ.,வான தீபக் பிருவா ஆகியோர் மட்டுமே புதிய அமைச்சர்களாக தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
மற்றவர்கள், ஹேமந்த் சோரன் தலைமையிலான அரசில் அமைச்சர்களாக பதவி வகித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.