இனி வருமான வரியை அமைச்சர்களே செலுத்த வேண்டும்: ம.பி., அரசு முடிவு
இனி வருமான வரியை அமைச்சர்களே செலுத்த வேண்டும்: ம.பி., அரசு முடிவு
ADDED : ஜூன் 25, 2024 06:05 PM

போபால்: ம.பி.,யில் அமைச்சர்களின் வருமான வரியை அரசே செலுத்தும் நடைமுறைக்கு முடிவு கட்டப்பட்டு உள்ளது. இனி மேல் அமைச்சர்களே அதனை செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
1972 ம் ஆண்டு அமைச்சர்களின் வருமான வரியை அரசே செலுத்தும் வகையில் சட்டம் கொண்டு வரப்பட்டது. இதன்படி கடந்த 52 ஆண்டுகளாக , முதல்வர் மற்றும் அமைச்சர்களின் வருமான வரியை அரசு செலுத்தி வந்தது. இந்த திட்டத்திற்கு மாநில அரசு இன்று ( ஜூன் 25) முடிவு கட்டியது.
முதல்வர் மோகன் யாதவ் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில், 1972 ல் கொண்டு வரப்பட்ட சட்டத்தை ரத்து செய்வது என்றும், இனிமேல் அமைச்சர்களே, தங்களது சம்பளத்தில் இருந்து அவர்களது வருமான வரியை செலுத்த வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. இதற்கான முடிவு ஒரு மனதாக எடுக்கப்பட்டது.
இந்நாள் வரை அமைச்சர்களின் வருமான வரியை செலுத்துவதற்காக கோடிக்கணக்கில் செலவு செய்யப்பட்ட நிலையில், மாநில அரசின் புதிய முடிவால், அந்த பணம் மிச்சமாகும். கடந்த 2023 -24 நிதியாண்டில் முதல்வர், சபாநாயகர், அமைச்சர்களின் வருமான வரியை செலுத்த ரூ.79 லட்சம் ஒதுக்கப்பட்டு இருந்தது. கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் இதற்காக ரூ.3.5 கோடி செலவானதாக மாநில அரசு தெரிவித்து உள்ளது.