ஹெப்பால் - தமிழக எல்லை வரை மெட்ரோ பாதை ரூ.28,405 கோடி செலவில் 'மெகா' திட்டம்
ஹெப்பால் - தமிழக எல்லை வரை மெட்ரோ பாதை ரூ.28,405 கோடி செலவில் 'மெகா' திட்டம்
ADDED : டிச 07, 2024 11:06 PM
பெங்களூரு:பெங்களூரில் இருந்து தமிழக எல்லை வரை மெட்ரோ பாதை அமைக்க, கர்நாடக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பெங்களூரு நகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், மக்கள் ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு குறைந்த நேரத்தில் செல்வதற்கும், மெட்ரோ ரயில் சேவை வசதியாக உள்ளது.
தற்போது செல்லகட்டா - ஒயிட்பீல்டு, மாதவாரா - சில்க் இன்ஸ்டிடியுட் இடையில், மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தினமும் சராசரியாக 8 லட்சம் பேர் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்கின்றனர்.
பணிகள் மும்முரம்
ஆர்.வி.ரோடு - பொம்மனஹள்ளி இடையில் புதிதாக, மெட்ரோ பாதை அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ளன. இந்த பாதையில் டிரைவர் இல்லாத மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட உள்ளன. அடுத்த மாதம் முதல் ரயில்கள் இயக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
நாகவாரா - காளேன அக்ரஹாரா; சென்ட்ரல் சில்க் போர்டு - விமான நிலையம் இடையில், புதிதாக மெட்ரோ பாதை அமைக்கும் பணிகளும், மும்முரமாக நடந்து வருகின்றன.
ஜே.பி.நகர் 4வது பேஸ் - கெம்பாபுரா; ஒசஹள்ளி - கடபகெரே இடையில், மெட்ரோ பாதைகள் அமைக்க, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு, மத்திய அரசிடம் இருந்து ஒப்புதல் கிடைத்தது.
17 கி.மீ., துாரம்
இந்நிலையில் விமான நிலைய சாலையில் உள்ள, ஹெப்பாலில் இருந்து தமிழகத்தின் ஒசூர் அருகே உள்ள சர்ஜாபூர் வரை 36.59 கி.மீ., துாரத்திற்கு 28,405 கோடி ரூபாய் செலவில், புதிய மெட்ரோ பாதைகள் அமைக்க, மெட்ரோ ரயில் நிர்வாகம் விரிவான திட்ட அறிக்கை தயாரித்து, கர்நாடக அரசின் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்திடம் சமர்ப்பித்து இருந்தது.
நேற்று முன்தினம் நடந்த அமைச்சரவை கூட்டத்தின்போது, புதிய ரயில் பாதைக்கு அனுமதி கொடுப்பது பற்றியும் விவாதிக்கப்பட்டு, இந்த பணிகளுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இதையடுத்து மத்திய அரசிடம் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியை, மெட்ரோ நிர்வாகம் மேற்கொண்டு உள்ளது. மத்திய அமைச்சரவை ஒப்புதல் கிடைத்த பின் பணிகள் துவங்கப்படலாம்.
ஹெப்பால் - சர்ஜாபூர் பாதையில் கங்காநகர், கால்நடை மருத்துவ கல்லுாரி, மேக்ரி சதுக்கம், குட்டஹள்ளி பேலஸ், கோல்ப் கோர்ஸ், பசவேஸ்வரா சதுக்கம், கே.ஆர்.சதுக்கம், டவுன்ஹால், சாந்திநகர், நிமான்ஸ், டெய்ரி சதுக்கம், கோரமங்களா 2 வது பிளாக், கோரமங்களா 3 வது பிளாக், ஜக்கசந்திரா, அகரா, இப்பலுார், பெல்லந்துார் கேட், கைகொண்டரஹள்ளி, தொட்டகனேலி, கார்மேலரம், அம்பேத்கர் நகர், கொடதி கேட், முத்தநல்லுார் கிராஸ், தொம்மசந்திரா, சோம்புரா, கட அக்ரஹாரா ரோடு ரயில் நிலையங்கள் வரும்.
சர்ஜாபூரில் இருந்து ஓசூர் 17 கி.மீ., துாரத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.