''அவர் வெளியே வந்ததும் சுனிதாவின் அரசியல் பயணம் முடிவுக்கு வரலாம்'': மணீஷ் சிசோடியா கணிப்பு
''அவர் வெளியே வந்ததும் சுனிதாவின் அரசியல் பயணம் முடிவுக்கு வரலாம்'': மணீஷ் சிசோடியா கணிப்பு
UPDATED : ஆக 15, 2024 06:58 PM
ADDED : ஆக 15, 2024 06:06 PM

புதுடில்லி: டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் இருந்து வெளியே வந்ததும், அவரது மனைவி சுனிதாவின் அரசியல் பயணம் முடிவுக்கு வரலாம் என அம்மாநில துணை முதல்வரும், ஆம்ஆத்மி மூத்த தலைவருமான மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் உள்ள நிலையில், கடந்த வாரம் ஜாமின் பெற்ற முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா திஹார் சிறையிலிருந்து வெளியே வந்தார். ஆம் ஆத்மி தலைமை அலுவலகத்தில் மணீஷ் சிசோடியா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மதுபான கொள்கை வழக்கு தொடர்பாக கடந்த மார்ச் 21ல் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்ட பிறகு அவரது மனைவி சுனிதா, அவருக்கும் கட்சிக்கும் இடையே ஒரு பாலமாக பணியாற்றினார்.
டில்லி, குஜராத் மற்றும் ஹரியானாவில் லோக்சபா தேர்தலுக்கான ஆம் ஆத்மியின் பிரசாரத்திலும் முக்கிய பங்கு வகித்தார். சுனிதா கெஜ்ரிவால் நன்கு படித்தவர். நன்னடத்தை மற்றும் அனுபவமுள்ள பெண். நெருக்கடி நேரத்தில் கட்சிக்கு அவர் தேவை. தனது போராளி கணவர் சிறையில் அடைக்கப்பட்ட நேரத்தில் மக்களைச் சென்றடையக்கூடிய ஒருவர் கட்சிக்கு தேவைப்பட்டார். தொலைக்காட்சியில் சுனிதா பேசுவதைப் பார்த்து நான் ஆச்சரியப்பட்டேன்.
சிறையில் இருக்கும் தனது கணவரின் போராட்டக் குணத்தை நேர்த்தியாக மக்களுக்கு எடுத்துரைத்ததை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன். அரவிந்த் கெஜ்ரிவால் வெளியே வந்தவுடன் சுனிதாவின் அரசியல் பயணம் முடிவுக்கு வரலாம் என்று நான் நினைக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். சுனிதா கெஜ்ரிவால், மத்திய வருவாய்த்துறை அதிகாரியாக இருந்து 2016ல் விருப்ப ஓய்வு பெற்றவர்.