பார்லி.,யின் நாயகர்கள்... சுவர் ஏறிக்குதித்த திமுக எம்பி; 2001 தாக்குதலில் நடந்தது என்ன?
பார்லி.,யின் நாயகர்கள்... சுவர் ஏறிக்குதித்த திமுக எம்பி; 2001 தாக்குதலில் நடந்தது என்ன?
UPDATED : பிப் 09, 2026 01:46 PM
ADDED : ஜன 12, 2026 06:56 AM

2001ம் ஆண்டு டிச.,13ம் தேதி
அப்போது நான் டில்லியில் மிகவும் புகழ் பெற்ற ஆங்கில சேனலான என்டிடிவியில் தமிழ் செய்திகளுக்காக பணிபுரிந்து கொண்டிருந்தேன்; விஜய் டிவியில் தமிழ் செய்திகளை என்டிடிவி தயாரித்து வழங்கிக் கொண்டிருந்தது. சென்னையில் உள்ள என்டிடிவி அலுலகத்திலிருந்து செய்திகள் ஒளிபரப்பாகின. தினமும் இரண்டு முறை செய்திகளை ஒளிபரப்பியது விஜய் டிவி. பிற்பாடு இது நிறுத்தப்பட்டது.
காரணம், செய்தி ஒளிபரப்பும் சேனல்களில் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேலாக வெளிநாட்டு மூலதனம் இருக்கக் கூடாது. இதனால் 2004ல் விஜய் டிவியின் செய்திகள் நிறுத்தப்பட்டன. டில்லியில் நடைபெறும் தமிழகம் சம்பந்தப்பட்ட செய்திகள், காவிரி நடுவர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என தமிழ்நாடு தொடர்பான விஷயங்கள் நடைபெறுகிறதோ, அங்கெல்லாம் நான் ஆஜராகி ஆகிவிடுவேன். பார்லிமென்ட் கூட்டத்தொடர் நடைபெறும்போது தினமும் சென்று செய்தி சேகரிப்பேன்.
எல்லா பத்திரிகையாளர்களும் பார்லிமென்டிற்குள் போக முடியாது. இதற்கென தனி பாஸ் உண்டு. இது இருந்தால்தான் லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் பத்திரிகையாளர் மாடத்தில் உட்கார்ந்து அவையின் நடவடிக்கைகளை கவனிக்க முடியும். லோக்சபாவுக்கு தனி பாஸ், ராஜ்யசபாவுக்கு தனி பாஸ் உண்டு.
டிசம்பர் 13, 2001
வழக்கம் போல காலை 10 மணிக்கே பார்லிமென்ட் வந்துவிட்டேன். அன்று அதிக நேரம் அவை நடக்காது என சொல்லப்பட்டது. சமாஜ்வாதி கட்சி எம்பிக்கள் ஏதோ பிரச்னையைக் கிளப்ப போகிறார்கள் என ஆளும் கட்சியான பாஜ தரப்பிலிருந்து தெரிவித்தனர். அப்போது வாஜ்பாய் தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடந்து கொண்டிருந்தது.
11 மணிக்கு அவை தொடங்கியது. 11 மணியிலிருந்து 12 வரை கேள்வி நேரம். உடனே சமாஜ்வாதி எம்பிக்கள் கூச்சலிட்டுக் கொண்டே அவையின் மத்திய பகுதிக்கு வந்தனர். சபாநாயகர் எவ்வளவோ கூறியும் கூச்சல் நிற்கவில்லை. கடைசியில் அவை ஒத்தி வைக்கப்பட்டது. பிரதமர் வாஜ்பாய், எதிர்க்கட்சி தலைவர் சோனியா உட்பட பலர் உடனே பார்லியில் இருந்து வெளியேறி தங்கள் அலுவலகங்களுக்கு சென்றுவிட்டனர்.
நான் வெளியே வந்தேன். பார்லிமென்டில் பல வாசல்கள் உள்ளன. எம்பிக்கள் உள்ளே நுழையும் முக்கிய வாயில் கேட் 1 என அழைக்கப்படும். இந்த வாயிலுக்கு இடது புறம் கேட் 12. இந்த வாசல் வழியாக சென்றால் ராஜ்யசபா பக்கம் என்பதால், ராஜ்யசபா எம்பிக்கள் இந்த வழியாக செல்வர். இந்த கேட் வாசலில் நானும், கேமராமேன் சுரேஷும் நின்று கொண்டிருந்தோம். எம்பிக்கள் வெளியேறுவதை சுரேஷ் படம் பிடித்துக் கொண்டிருந்தார்.
கண் முன் சாவு
மணி 11.30
'டம்' என ஒரு சத்தம் கேட்டது. 'பார்லிமென்டிற்குள் பட்டாசு வெடிக்க சான்ஸ் கிடையாதே, என்னவாக இருக்கும்' என நினைத்து கேட் 12ஐ பார்த்தேன்.
அங்கே…
பார்லிமென்ட் செக்யூரிட்டி ஒருவர் கீழே விழுந்து கொண்டிருந்தார். ஒருவன் கையில் துப்பாக்கியுடன், நாங்கள் நின்றிருந்த வாசலை நோக்கி ஓடி வந்து கொண்டிருந்தான். இதையெல்லாம் சுரேஷ் தன் வீடியோ கேமராவில் பதிவு செய்து கொண்டிருந்தார். அவருக்கு என்ன நடக்கிறது என்று தெரியவில்லை.
பார்லிமென்ட் வந்தவர்களுக்கு கேட் 12க்கும் 1க்கும் உள்ள தூரம் தெரிந்திருக்கும். 15 மீட்டருக்கும் குறைவான தூரம்தான். கையில் துப்பாக்கியோடு இருந்தவன் ஒரு பயங்கரவாதி. 12ம் எண் கேட்டிலிருந்த செக்யூரிட்டியை சுட்டு வீழ்த்திவிட்டு, நாங்கள் நின்றிருக்கும் கேட் 1ஐ நோக்கி ஓடி வந்து கொண்டிருந்தான்.
கேட் 12ல் விழுந்த காவலர் பயங்கரவாதியைப் பார்த்த உடனே தன் வாக்கி டாக்கியில், பயங்கரவாத தாக்குதல் என செய்தி சொல்லிவிட்டார். (இதெல்லாம் பிற்பாடுதான் எங்களுக்கு தெரிந்தது). என்ன நடக்கிறது என சுதாரித்துக் கொள்ளவே சில வினாடிகள் ஆயின.
கேட் 1ல் நின்றிருந்த பாதுகாவலர் படிக்கட்டுகளில் இறங்கி எங்களை நோக்கி ஓடி வந்தார். ஒரு பக்கம் பயங்கரவாதி எங்களை நோக்கி வந்து கொண்டிருந்தான். என்னையும் சுரேஷையும் தன் இரண்டு கைகளால் எங்கள் பிடரியில் கை வைத்து தூக்காத குறையாக பார்லிமென்டிற்குள் தள்ளி, உடனே முக்கிய வாசலை சாத்தி தாழ்ப்பாள் போட்டுவிட்டார். இதெல்லாம் 5 வினாடிகளுக்குள் நடந்து விட்டன.
குண்டு வெடித்தது
கேட் 1 மிகவும் பெரியது. மரத்தால் செய்யப்பட்டது. இரண்டு கதவுகளையும் ஒன்றாய் சேர்த்து மூட வேண்டும். ஒருவரால் மூடிவது சற்று கடினம். அந்த காவலர் வெறி வந்தவர் போல கதவை தாழ் போட்டுவிட்டு, “உள்ளே ஏதாவது ஒரு அறைக்குள் சென்று தாள் போட்டுக் கொள்ளுங்கள்..வெளியே வர வேண்டாம்” என உத்தரவிட்டார்.
“யார் கதவைத் தட்டினாலும் திறக்க வேண்டாம்” என சொல்லிவிட்டு மறைந்து போனார் அந்த காவலர். டமார் என வாசலுக்கு வெளியே சத்தம் கேட்டது. தொடர்ந்து துப்பாக்கி சுடும் சப்தம் காதைப் பிளந்தது. நானும் சுரேஷும் வலது பக்க காரிடாரில் சென்று ஒரு அறைக்குள் நுழைந்தோம்.
அந்த அறையில் 5 பேர் இருந்தனர். வயதானவர் ஒருவர் டென்ஷனாக இருந்தார். அவர்தான் அதிகாரி. மற்ற நான்கு பேசும் அவருக்கு கீழே பணிபுரிபவர்கள். “யாரும் பேச வேண்டாம். அமைதியாக உட்காருங்கள்'' என அந்த அதிகாரி எங்களிடம் சொல்லிவிட்டு அறையின் கதவைத் தாழிட்டார். அந்த அறையில் ஒரு டிவி இருந்தது. ஏதோ ஒரு சேனல் ஓடிக்கொண்டிருந்தது. பார்லிமென்ட் தாக்குதல் குறித்து எந்த செய்தியும் வரவில்லை.
பிரேக்கிங் நியூஸ்
அப்போதுதான் நினைவிற்கு வந்தது. அடடா... கையில் மொபைல்போன் இருக்கிறதே... பார்லிமென்டிற்குள் அப்போது மொபைல்போன் கொண்டு செல்ல பத்திரிகையாளர்களுக்கு அனுமதி இல்லை. நான் அவைக்குள் செல்லும்போது என் கேமராமேனிடம் மொபைல்போனைக் கொடுத்துவிட்டு செல்வேன். ஆனால் இந்த திடீர் தாக்குதலால் இப்போது மொபைல்போன் என் கையில். அத்தோடு சுரேஷும் கேமராவுடன் இருந்தார். அப்போது கேமராவிற்கும் அனுமதி கிடையாது.
உடனே மொபைல்போனில் என் செய்தி ஆசிரியர் ராஜ்தீப் சர்தேசாயைத் தொடர்பு கொண்டேன். “ராஜ்தீப்…பார்லிமென்டில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடந்து கொண்டிருக்கிறது”.
“கியா….என்ன சொல்கிறாய்” கிண்டலாக பதில் வந்தது ராஜ்தீப்பிடமிருந்து...
நாங்கள் அறைக்குள் இருந்தாலும் வெளியே குண்டு வெடிப்பது, துப்பாக்கிச்சூடு என அனைத்து சப்தங்களும் கேட்டுக் கொண்டிருந்தன.
“துப்பாக்கி சுடும் சப்தம் கேட்கிறதா”
சில விநாடிகள் அமைதிக்கு பின், 'ஓ...' என ராஜ்தீப் அலறும் சப்தமும்…'பிரேக்கிங் நியூஸ்…பார்லிமென்ட் அட்டேக்ட்' என பக்கத்தில் யாருக்கோ சொல்வதும் எனக்கு கேட்டது.
“நான் அங்கே வந்து கொண்டிருக்கிறேன்” என போனை கட் செய்தார் ராஜ்தீப். என்னுடன் பணியாற்றும் சக பத்திரிகையாளர்கள் மனோரஞ்சன் பாரதி, திவ்யா ஆகியோரை மறந்தே போனேன். மனோரஞ்சன் என்டிடிவியின் ஹிந்தி சேனலின் சீனியர். திவ்யா எங்கள் ஆங்கில சேனலின் ரிப்போர்ட்டர். மனோரஞ்சனை அலுவலகத்தில் பாபா என்றுதான் கூப்பிடுவோம்.
“பாபா..எங்கே இருக்கிறாய்” போனில் கேட்டேன்
“11.30 மணி லைவ் செய்வதற்காக பார்லிமென்டிலிருந்து வெளியே வந்தேன். ஆனால் இப்போது உள்ளே விட மறுக்கிறார்கள். எல்லா வாசலையும் மூடி விட்டார்கள். நீ எங்கே”
நடந்த விஷயங்களை சொன்னேன். “பத்திரமாக இரு. நீ சொன்ன விஷயங்களை இப்போது நியூசில் போடச் சொல்கிறேன். நானே ஹிந்தியில் இதை லைவ் செய்து விடுகிறேன்...”
பாபா மற்றும் வேறு சில பத்திரிகையாளர்களும் தங்கள் டிவியில் நேரடி ஒளிபரப்பில் (இதை லைவ் OB - outdoor broadcast என்பார்கள்) செய்திகளை சொல்ல, 11.30 மணிக்கு அதாவது பார்லிமென்ட் ஒத்தி வைக்கப்பட்ட உடனே வெளியே சென்றுவிட்டனர். பயங்கரவாதிகள் தாக்குதல் ஆரம்பித்த பிறகு பார்லிமென்டிற்குள் யாரையும் அனுமதிக்கவில்லை. இதனால் அந்த நிருபர்கள் உள்ளே வர முடியவில்லை.
பார்லிமென்டுக்கு வெளியே விஜய் சவுக்கில் டிவி ஒளிபரப்பு வேன்கள் நிறுத்தப்பட்டிருக்கும். அங்கிருந்துதான் அனைத்து டிவி சேனல்களுக்கும் நிருபர்கள் லைவ் செய்வர். அறையில் இருந்த டிவியைப் பார்த்தேன். பார்லிமென்ட் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் என பிரேக்கிங் நியூஸ் வர ஆரம்பித்தது.
நீ எங்கே?
எங்களுடைய தமிழ் செய்திகள் பிரிவுகளின் தலைவர் ஜெனிபர் அருள். இவர் என் டிடிவியின் சென்னை பீரோ தலைவர். அவருக்கு போன் செய்து என் நிலைமையைச் சொன்னேன். இதற்கிடையே அறையில் இருந்த அதிகாரி, 'அதிகம் பேசாதே' என எனக்கு அட்வைஸ் செய்து கொண்டிருந்தார். வெளியே தொடர்ந்து குண்டுகள் வெடிக்கும் சப்தம் கேட்டுக் கொண்டிருந்தது.
வீட்டில் என்னைப் பற்றி கவலைப்படுவார்களே என, முதலில் மனைவிக்கு போன் செய்து விஷயத்தைச் சொன்னேன். அடுத்து என் மொபைல்போன் அடித்தது. வேலூரிலிருந்து போன். “பார்லிமென்டில் டெடரிஸ்ட் புகுந்துட்டாளாமே…நீ எங்க இருக்க...” என்ற அம்மாவின் குரலில் கவலை தெரிந்தது.
“நான் பார்லிமென்டில்தான் இருக்கிறேன்”
“ஐயோ…உனக்கு ஒன்னும் ஆகலியே”
“நீ எதற்கும் கவலைப்படாதே, பார்லிமென்டில் ஒரு ரூமிற்குள் இருக்கிறேன். எந்த பிரச்னையும் இல்லை”. அடுத்து அப்பா ஒரு நிமிடம் பேசினார். வெளியே கை எறி குண்டுகள் வெடிக்கும் டொம் டொம் சப்தமும், சரமாரியாக துப்பாக்கி சுடும் சப்தமும் கேட்டுக் கொண்டேயிருந்தது. அந்த அறையில் இருந்தவர்கள் எல்லாம் பீதியில் இருந்தனர். எந்த நேரத்தில் என்ன ஆகுமோ? ஒரு வேளை பயங்கரவாதிகள் உள்ளே நுழைந்துவிட்டால்?
நானும் சுரேஷும் தமிழில் பேசுவதைப் பார்த்துவிட்டு அங்கிருந்த ஒருவர், “ சார்…என் பெயர் ஸ்ரீனிவாசன்'' என அறிமுகப்படுத்திக் கொண்டு பேச ஆரம்பித்தார்.அவர் பார்லிமெண்டில் பணிபுரிபவர். நாங்கள் தமிழில் பேசிக் கொண்டிருப்பது அந்த வயதான அதிகாரிக்கு பிடிக்கவில்லை என்பது அவர் எங்களைப் பார்த்த பார்வையிலேயே தெரிந்தது.
இந்த ஸ்ரீனிவாசன் நல்ல நண்பரானார். கடைசியில் பார்த்தால் என் வீட்டிற்கு அருகிலேயே அவர் குடியிருப்பது தெரிந்தது. இன்று வரை நட்பு தொடர்கிறது. இதற்கிடையே ஆபீசிலிருந்து பலர் போன் செய்து என்ன நடக்கிறது என கேட்டுக் கொண்டேயிருந்தனர்.
வாஜ்பாய், சோனியா
அறையிலிந்த டிவியில் செய்திகள் வந்த வண்ணம் இருந்தன. பார்லிமென்டுக்கு வெளியே இருந்த நிருபர்கள் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். துணை ராணுவ வீரர்கள் பார்லிமென்ட் வளாக காம்பவுண்ட் சுவருக்கு வெளியே துப்பாக்கியுடன் தயார் நிலையில் இருப்பதை அனைத்து சேனல்களும் காட்டிய வண்ணம் இருந்தன.
பிரதமர் வாஜ்பாய், எதிர்க்கட்சி தலைவர் சோனியா மற்றும் முக்கிய தலைவர்கள் தீவிரவாதிகள் தாக்குதலுக்கு முன்னரே பார்லிமென்டில் இருந்து வெளியேறி விட்டிருந்தனர் என டிவியில் சொன்னார்கள். உள்ளே மாட்டிக் கொண்டிருந்த சில எம்பிக்கள், ஒரு சில அமைச்சர்கள், 'உள்ளே என்ன நடக்கிறது' என அவர்களுக்கு தெரிந்தவற்றை சேனல்களுக்கு போனில் பேட்டி அளித்துக் கொண்டிருந்தனர்.
போலீஸ் தரப்பிலும் செய்திகள் வந்தாலும் அதிகமான விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை. வைகோ உட்பட சில தமிழக எம்பிக்களும் அப்போது பார்லிமென்டில் இருந்தனர்.
சுவர் ஏறி தப்பிய திமுக எம்பி
இப்படி தீவிரவாதிகள் தாக்குதல் தொடர்ந்து கொண்டிருந்த போது ஒரு சுவாரஸ்யமான விஷயமும் நடந்தது. திமுக எம்பி வெற்றிச்செல்வன். இவருடைய எம்பி குவார்ட்டர்ஸ் சவுத் அவென்யூவில் இருந்தது. தாக்குதல் நடக்கிறது என தெரிந்ததுமே உடனே ஒரு அதிரடி காரியத்தைச் செய்தார்.
பார்லிமெண்டின் பின் பக்கம் ஓடினார். அங்கிருந்த காம்பவுண்ட் சுவர் சற்று உயரமனது. இருப்பினும் எப்படியோ வேஷ்டியை மடித்து கட்டிக் கொண்டு சுவர் ஏறிவிட்டார். சுவரிலிருந்து குதித்தால் வீடு போய் சேர்ந்துவிடலாம். ஒரு கணம் யோசித்தார். பிறகு தொப் என கீழே குதித்தார். காலில் லேசான அடி. கைகளில் சிராய்ப்பு.
இதெல்லாம் தாக்குதல் ஆரம்பித்த உடனேயே நடந்துவிட்டது. இல்லையென்றால் இவர் பார்லிமென்டை விட்டு அவர் வெளியேறியிருக்க முடியாது. “அப்போது என்ன செய்கிறேன் என்றே எனக்கு தெரியவில்லை. ஏதோ ஓட வேண்டும் என்பது மட்டும்தான் எனக்கு தோன்றியது. இப்போது அதை நினைத்தாலும் உடம்பு நடுங்குகிறது” என பிற்பாடு என்னிடம் சொன்னார் வெற்றிச்செல்வன்.
5 மணி நேர சிறை
மணி 1 ஆனது. நல்ல பசி. குடிக்கவும் அந்த அறையில் தண்ணீர் இல்லை. அறையை விட்டு வெளியே போகவும் முடியாது. சிறுநீர் கழிக்கவும் வெளியே செல்ல முடியாத நிலை. கலவரத்துடன் அறையில் டிவி பார்த்துக் கொண்டிருந்தோம்.
மணி சுமார் 4.30 இருக்கும்.
தட்...தட்...தட்...
திடீரென நாங்கள் இருந்த அறைக் கதவு தட்டப்பட்டது. எல்லோர் முகத்திலும் பீதி. யார் தட்டுகிறார்கள்? ஒரு வேளை தீவிரவாதிகளோ? தவைத் திறக்கலாமா? வேண்டாமா?
நாங்கள் இருந்த அறையில் அதிகாரிக்கும் குழப்பம். 'யார் கதவைத் தட்டுவது...' என கேட்டார் அதிகாரி.''நாங்கள் பார்லிமெண்ட் செக்யூரிட்டி…இப்போது நீங்கள் வெளியே வரலாம்...,'' என கதவிற்கு வெளியே இருந்து குரல் வந்தது.
இது உண்மையிலேயே செக்யூரிட்டிதானா? அல்லது...
இப்படி குழப்பம் இருந்தாலும்…வேறு வழியில்லாமல் கதவைத் திறந்தார் அதிகாரி. வெளியே நின்றது -பார்லிமென்ட் செக்யூரிட்டி தான். “இனிமேல் பிரச்னை இல்லை. பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுவிட்டனர். நீங்கள் வெளியே வரலாம்” என்றனர். 5 மணி நேர சிறைக்குப் பிறகு வெளியே வந்தோம்.
வைகோ
நானும் சுரேஷூம் வெளியே வந்தோம். முக்கிய வாசலான கேட் 1ற்கு வெளியே படிக்கட்டுகளின் பக்கத்தில் ஒருவன் தலைவிரி கோலமாக இறந்து கிடந்தான். பார்லிமென்டின் வாசல் கதவில் ஒரு பெரிய ஓட்டையும் இருந்தது. வாசலை துளைக்கப் பார்த்திருக்கின்றனர் பயங்கரவாதிகள். ஆனால் முடியவில்லை என்பதற்கு இந்த ஓட்டை ஒரு சாட்சி.யாராவது தமிழ் எம்பிக்கள் தென்படுகிறார்களா, பேட்டி எடுக்கலாம் என பார்த்தோம்.
வைகோ வந்து கொண்டிருந்தார். அவர் எப்படி உள்ளே மாட்டிக் கொண்டார்? என்ன நடந்தது என்பதை விளக்கமாக சொன்னார். பார்லிமென்டிலிருந்து ஒரு நேரடி ரிப்போர்ட் தயார் செய்து அனுப்பினேன். விஜய் செய்திகளில் ஒளிபரப்பாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
மறக்க முடியாத நபர்
பார்லிமென்ட் தாக்குதலில் தப்பி இன்று இதை எழுதிக் கொண்டிருக்க முக்கிய காரணம் ஒருவர். அவர்தான் என்னையும் என் கேமரா மேனையும் சட்டையைப் பிடித்து தூக்கி உள்ளே தள்ளி கதவைச் சாத்தியவர்.அவர் அப்படி செய்யாவிட்டால் நாங்கள் இரண்டு பேரும் அப்போது எங்களை நோக்கி ஓடி வந்து கொண்டிருந்த பயங்கரவாதியின் துப்பாக்கிக்கு இரையாகியிருப்போம். ஒரு முறை பார்லிமென்ட் க்ளிக்கில் அவரைப் பார்க்க நேர்ந்தது.
“ என்ன சவுக்கியமா?” என விசாரித்தார். “நீங்கள் இல்லையென்றால் இன்று நான் உயிரோடு இருந்திருக்க மாட்டேன்”“யார் இருக்கணும், யார் போகனும் என்பது நம் கையில் இல்லை…எல்லாம் அவர் செயல்” என மேலே கை காட்டினார்.
அவர் தன் பெயரைக் கூட சொல்ல மறுத்துவிட்டார். அன்று பார்லிமென்டில் இருந்த அத்தனை எம்பிக்கள், ஊழியர்கள், பத்திரிகையாளர்கள் என அனைவரையும் காப்பாற்றியது இந்த முகம் தெரியாத ஹூரோக்கள்தான். இந்த தாக்குதலில் டில்லி போலீசார் 6 பேர், பார்லிமெண்ட் காவலர்கள் 2 பேர், ஒரு தோட்ட வேலை செய்பவர் என 9 பேர் இறந்து மற்றவர்களைக் காப்பாற்றிவிட்டனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 5 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர்.
ஏஎன்ஐ செய்தி நிறுவனத்தைச் சேர்ந்த ஒரு இளம் கேமரா அஸிஸ்டெண்ட் காயமடைந்தார். ஒரு சில மாதங்கள் கழித்து அவரும் இறந்து போனார். என் வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவம் இது!
- அ.வைத்தியநாதன்
அ.வைத்தியநாதன், 30 ஆண்டுக்கும் மேலாக டில்லியில் செய்தியாளராக பணியாற்றியவர்.தொடர்புக்கு: vaithi@dinamalar.in

