ADDED : மார் 13, 2026 02:16 AM
ஜம்மு: பாகிஸ்தான், 'ட்ரோன்' மூலம் ஜம்மு - காஷ்மீரையொட்டிய சர்வதேச எல்லை கோடு பகுதியில் வீசப்பட்ட 12 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெராயினை, ஜம்மு போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஜம்மு - காஷ்மீரை ஒட்டிய சர்வதேச எல்லைக்கோடு பகுதியில் சந்தேகத்திற்கிடமான, 'ட்ரோன்' எனப்படும், ஆளில்லா சிறிய ரக விமானம், வயல்வெளியில் பை ஒன்றை வீசி சென்றதாக அப்பகுதி மக்கள் ஜம்மு போலீசாருக்கு தெரிவித்தனர்.
இதையடுத்து, எல்லை பாதுகாப்பு படையினர், பிஷ்ணா பகுதியில் உள்ள பஹதுர்புரா கிராமத்தின் வயல்வெளியில், நேற்று முன்தினம் இரவு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது கயிறு மற்றும் கொக்கியில் இணைக்கப்பட்ட சிறிய பை ஒன்றை அவர்கள் கைப்பற்றினர். அதை திறந்து பார்த்தபோது, அதில், 2 கிலோ ஹெராயின் போதை பொருள் இருந்தது.
அதன் சர்வதேச மதிப்பு 12 கோடி ரூபாய் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து, விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
