ரூ.50 கோடி மதிப்பு ‘ஹெராயின்’ பறிமுதல்; நான்கு பேர் கைது
ரூ.50 கோடி மதிப்பு ‘ஹெராயின்’ பறிமுதல்; நான்கு பேர் கைது
UPDATED : அக் 06, 2026 12:00 AM
ADDED : அக் 05, 2026 06:44 PM
புதுடில்லி: டில்லி மற்றும் உத்தர பிரதேசத்திற்கு இடையே இயங்கி வந்த, ‘ஹெராயின்’ போதைப்பொருள் உற்பத்தி மற்றும் வினியோக கும்பலைச் சேர்ந்த நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 50 கோடி ரூபாய் மதிப்புள்ள ஏழு கிலோ ஹெராயினை பறிமுதல் செய்தனர்.
டில்லியின் பேகம்பூர் பகுதியில் போதைப்பொருள் நடமாட்டம் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்படி, போலீசார் விசாரணையைத் தொடங்கினர். கடந்த மாதம் 16ம் தேதி, பேகம்பூர் செக்டார் 32ல் சொகுசு காரை மறித்து போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, ஹெராயின் கடத்தி வந்த ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த லட்சுமண் ஹூடா, 58, என்பவரை கைது செய்ததுடன், 300 கிராம் ஹெராயின் மற்றும் 3 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்தனர்.
லட்சுமண் ஹூடாவிடம் நடத்திய விசாரணையில், டில்லி ரகுபீர் நகரைச் சேர்ந்த அனில் என்கிற போலா, 51, என்பவர் ஹெராயின் சப்ளை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, ஹரியானா மாநிலம் சோனிபட்டில் பதுங்கியிருந்த அவரை செப்., 17ல் போலீசார் கைது செய்தனர். அவரது காரிலிருந்து 501 கிராம் ஹெராயின் கைப்பற்றப்பட்டது.
கைதான அனில் மீது ஏற்கனவே 12 வழக்குகள் உள்ளன. கடந்த ஆண்டு போதைப்பொருள் வழக்கில் கைதாகி இடைக்கால ஜாமீனில் வெளியே வந்த அவர், மீண்டும் சரணடையாததால், நீதிமன்றத்தால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருந்தார்.
அவரிடம் நடத்திய விசாரணையில் உ.பி.,யின் லக்னோவில் சட்டவிரோதமாக ஹெராயின் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கியது கண்டறியப்பட்டது. இதையடுத்து, நேற்று முன்தினம் அங்கு அதிரடி சோதனை நடத்திய போலீசார், பரேலியைச் சேர்ந்த பப்லு, 35, என்பவரை கைது செய்தனர். அங்கிருந்து புதிதாக தயாரிக்கப்பட்ட 6 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும், ஹெராயின் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட 2.5 கிலோ சோடியம் உள்ளிட்ட உபகரணங்களையும் போலீசார் கைப்பற்றினர். பப்லு அளித்த தகவலின்படி, இந்த கும்பலின் மூளையாக செயல்பட்டவரும் தொழிற்சாலையின் உரிமையாளருமான ருக்சார் அலி என்கிற ராஜுவை, உ.பி.,யின் பரேலியில் போலீசார் கைது செய்தனர்.
