ADDED : பிப் 22, 2024 06:47 AM

பெங்களூரு நகரவாசிகள் வார இறுதி நாட்களில், குடும்பத்துடன் எங்காவது வெளியே சென்று, பொழுதுபோக்க விரும்புவர். இத்தகைய மக்களுக்கு ஏற்ற இடமாக உள்ளது ஹெசருகட்டா ஏரி.
அர்க்காவதி ஆற்றின் குறுக்கே, 1894ம் ஆண்டு இந்த ஏரி உருவாக்கப்பட்டது. தற்போது இந்த ஏரிக்கு வயது 130. பெங்களூரின் குடிநீர் தேவையை நிறைவேற்றுவதிலும், இந்த ஏரிக்கு முக்கிய பங்கு உண்டு.
ஏறக்குறைய 1,000 ஏக்கரில் பரந்து விரிந்து உள்ள ஏரி, இயற்கை ஆர்வலர்களை, வெகுவாக கவர்ந்து வருகிறது. பெங்களூரு நகருக்குள் நிலவும் வாகன இரைச்சல், பரபரப்புக்கு சற்று விடை கொடுத்து, மனதை அமைதிப்படுத்த ஏற்ற இடமாகவும் உள்ளது.
பறவைகளை விரும்புவர்களுக்கு, ஹெசருகட்டா ஏரி சொர்க்கமாக விளங்குகிறது. கிங்பிஷர், பாண்ட் ஹெரான், மேக்பி ராபின், பிளாக் கைட்ஸ், புஷ்லார்க்ஸ், எக்ரெட் உட்பட பல வெளிநாட்டு பறவைகள், இந்த ஏரிக்கு வந்து செல்கின்றன.
ஏரியின் கரையில் சைக்கிள் ஓட்டியபடியே, ஏரியின் அழகைக் கண்டு ரசிப்பது, கண்கொள்ளா காட்சியாக இருக்கும். ஏரிக்கரையில் ஸ்ரீரேணுகா தேவி எல்லம்மா கோவிலும் உள்ளது.
இதுதவிர ஏரிக்கு அருகில் அரசு மீன்வளத்துறை பூங்கா உள்ளது. கோழி, பால் பண்ணைகளும் உள்ளன.
ஹெசருகட்டாவில் இருந்து ராஜனகுண்டே வழியாக எலஹங்கா வரும் சாலையின், இருபுறமும் பச்சை, பசலேன காட்சி அளிக்கிறது. இதனால் வனப்பகுதி சாலைக்குள் செல்வது போன்று உணர்வு ஏற்படும்.
ஏரியில் இருந்து 8 கி.மீ., துாரத்தில், பைலகெரே மயில் சரணாலயமும் உள்ளது. நகரின் அனைத்து பகுதிகளில் இருந்தும், ஹெசருகட்டாவுக்கு பி.எம்.டி.சி., பஸ்கள் இயக்கப்படுகின்றன. சொந்த வாகனத்தில் சென்றால், வாகனங்களை நிறுத்துவதற்கு, ஏரியின் முன் பார்க்கிங் வசதி இல்லை என்பது மட்டும் சிறிய குறை.
- நமது நிருபர் -