'ஹைடெக்' விபசார இடைத்தரகர்கள் கண்டுபிடிக்க ஏ.சி., தலைமையில் குழு
'ஹைடெக்' விபசார இடைத்தரகர்கள் கண்டுபிடிக்க ஏ.சி., தலைமையில் குழு
ADDED : ஜன 14, 2024 11:34 PM
பெங்களூரு: 'ஸ்பா' என்ற பெயரில் 'ஹைடெக்' விபசாரம் நடந்து வருவது தொடர்பான விசாரணை முடுக்கி விடப்பட்டு உள்ளது. ஏ.சி.பி., பிரியதர்ஷினி தலைமையிலான குழுவினர், விபசார வலையமைப்புக்கு உதவும் இடைத்தரகர்கள் குறித்து தகவல்கள் சேகரிக்க துவங்கி உள்ளனர்.
கடந்த 6ம் தேதி, மஹாதேவபுராவில், 'ஸ்பா' என்ற பெயரில் விபசாரம் நடப்பதாக, மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அங்கு நான்கு மணி நேரம் நடந்த சோதனையில், வெளிநாட்டு பெண்கள் உட்பட 44 பெண்கள் மீட்கப்பட்டனர். முக்கிய குற்றவாளி அனில் ரெட்டி உட்பட 34 பேர் கைது செய்யப்பட்டனர்.
'ஸ்பா' என்ற பெயரில் 'ஹைடெக்' விபசாரம் நடந்து வருவது தொடர்பான விசாரணை முடுக்கி விடப்பட்டு உள்ளது. ஏ.சி.பி., பிரியதர்ஷினி தலைமையில் குழு அமைக்கப்பட்டு உள்ளது.
ஹைடெக் விபசாரத்தில் உள்நாடு உட்பட வெளிநாட்டு பெண்களையும் ஈடுபடுத்திய நிலையில், எந்த இடைத்தரகர்கள் மூலம் அவர்கள் கொண்டு வரப்பட்டனர், யாரால், இவர்கள் ஏமாற்றப்பட்டனர் என்று விசாரிக்கின்றனர்.
ஏற்கனவே, ஸ்பாவில் பணிபுரியும் 23 தொழிலாளர்களை சாட்சியாக்கி, தகவல்களை போலீசார் சேகரித்து உள்ளனர். ஆனால், அனில் ரெட்டியிடம் நடத்திய விசாரணையின் போது, இடைத்தரகர்கள் குறித்து எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை.
எனவே, மீட்கப்பட்ட பெண்களிடம் போலீசார் விசாரணையை துவக்கி உள்ளனர். சோதனையின் போது பிடிபட்ட வாடிக்கையாளர்களுக்கும் விசாரணைக்கு ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.
அத்துடன், அனில் ரெட்டி, மீட்கப்பட்ட பெண்கள், ஸ்பா பணியாளர்களின் மொபைல் போன்கள் சோதனை செய்யப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.