கெய்சரில் ரகசிய கேமரா புகார்; பெண்ணின் நாடகம் அம்பலம்
கெய்சரில் ரகசிய கேமரா புகார்; பெண்ணின் நாடகம் அம்பலம்
ADDED : ஜன 28, 2025 06:26 AM
எலக்ட்ரானிக் சிட்டி : வீட்டின் கெய்சரில் ரகசிய கேமரா பொருத்திய சம்பவத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. பெண்ணின் நாடகம் அம்பலமானது.
பெங்களூரின் எலக்ட்ரானிக் சிட்டியில் வசிக்கும் பெண் ஒருவரின் வீட்டில் கெய்சர் பழுதடைந்தது. இதை சரி செய்ய, டெக்னீஷியன் ஒருவரை வரவழைத்தார்.
அந்நபர் கெய்சரை சரிசெய்தபோது, அதில் ரகசிய கேமரா பொருத்தியதாக கூறப்பட்டது.
இந்த கேமரா மூலமாக, பெண் குளிப்பதை டெக்னீஷியன் வீடியோ பதிவு செய்து, 'நான் அழைக்கும்போது, நீ வந்தே ஆக வேண்டும். இல்லையென்றால் வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிடுவேன்' என மிரட்டுவதாக தன் குடும்பத்தினரிடம் தெரிவித்தார்.
குடும்பத்தினர், யு டியூபர் மஞ்சேஷ் யஷஸ் மற்றும் அவரது நண்பர்களின் உதவியுடன், டெக்னீஷியனை பிடிக்க முயற்சித்தனர். பெண்ணின் மூலமாக, 24ம் தேதி, டெக்னீஷியனை வரவழைத்துப் பிடித்தனர்.
அவரை அடித்து, உதைத்து எலக்ட்ரானிக் சிட்டி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இந்த சம்பவத்தில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
'தண்ணீரை சூடாக்கும் கெய்சரில், எப்படிப்பட்ட கேமராவை பொருத்தினாலும், உருகிவிடும் அல்லது பாதிக்கப்பட்டுவிடும். டெக்னீஷியன் பொருத்திய ரகசிய கேமரா எப்படி செயல்பட முடியும்?' என்ற சந்தேகம் எழுந்தது.
பெண்ணையும், நபரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இருவரும் முன்னுக்குப் பின், முரணாக பதிலளித்தனர். அதன்பின் இருவரையும் தனித்தனியாக விசாரித்தனர்.
இதற்காக பெண் அதிகாரி ஒருவரை நியமித்தனர். அவர் அப்பெண்ணிடம் விசாரித்தபோது, பல விஷயங்கள் வெளிச்சத்துக்கு வந்தன.
அந்த பெண்ணுக்கும், டெக்னீஷியன் என கூறப்பட்ட நபருக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. அப்பெண்ணே, தன் நிர்வாண வீடியோக்களை பதிவு செய்து, அந்நபரின் மொபைல் போனுக்கு அனுப்பியுள்ளார்.
இதை வைத்து அந்நபர், பிளாக்மெயில் செய்ததாக தெரிகிறது. இந்த விஷயம் கணவருக்கும், குடும்பத்தினருக்கும் தெரிந்தது. எப்படி தப்பிப்பது என, தெரியாமல் கெய்சர் கேமரா நாடகமாடியது அம்பலமானது.
பெண்ணும் புகார் அளிக்கவில்லை. தன்னை தாக்கியது தொடர்பாக அந்நபரும் புகார் அளிக்க விரும்பவில்லை. எனவே போலீசார், இருவரையும் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.