எல்லையோர காடுகளில் நக்சலைட்டுகள் பதுங்கலா? : தமிழக - கேரள போலீஸ் தீவிர வேட்டை
எல்லையோர காடுகளில் நக்சலைட்டுகள் பதுங்கலா? : தமிழக - கேரள போலீஸ் தீவிர வேட்டை
ADDED : ஜூலை 23, 2011 12:10 AM
தொடுபுழா : தமிழக - கேரள எல்லையோர மலைகள் மற்றும் காடுகளில் நக்சலைட்டுகள் பதுங்கி உள்ளனரா என, இரு மாநில போலீசாரும் இணைந்து தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
தமிழக - கேரள எல்லையோர காடுகளில் நக்சலைட் பயங்கரவாத செயல்பாடுகள் மற்றும் நடமாட்டம் இருப்பதாகவும், அவர்களிடம் பயிற்சி பெற சில இஸ்லாமிய பயங்கரவாத குழுக்களைச் சேர்ந்தவர்கள் உள்ளதாகவும், அதற்காக அங்கு அவர்கள் முகாமிட்டிருப்பதாகவும், தமிழ்நாடு கியூ பிராஞ்ச் போலீசார் ரகசிய ஆய்வில் தெரிய வந்தது. இதுகுறித்து, போலீசார் அறிக்கையளித்தனர்.
இதை தொடர்ந்து, மத்திய உள்துறையின் பாதுகாப்பு மற்றும் விசாரணை குழுவும், இதுகுறித்து இரு மாநில அரசுகளை எச்சரித்திருந்தது. தங்களது மாநில பகுதிகளில் பயங்கரவாத அமைப்பு முகாம்கள் செயல்படுகின்றனவா என்பதை அறிந்து நடவடிக்கை எடுக்க இரு மாநில அரசுகளும் முடிவெடுத்தன. இதன் அடிப்படையில் தமிழக போலீஸ் டி.எஸ்.பி., செல்வராஜ், பயங்கரவாத தடுப்புப் பிரிவு டி.எஸ்.பி., ஆறுமுகம், கொடைக்கானல் சரக டி.எஸ்.பி., பால்ராஜ் ஆகியோருடைய தலைமையில் போலீசார் தேடுதல் வேட்டையில் இறங்கினர்.அதேபோல், கேரள மாநில போலீஸ் இடுக்கி மாவட்ட எஸ்.பி., ஜார்ஜ் வர்கீஸ், மூணாறு டி.எஸ்.பி., குரியகோஸ், சர்க்கிள் இன்ஸ்பெக்டர் சியாம்லால், ஏழு சப் இன்ஸ்பெக்டர்கள் ஆகியோர் அடங்கிய குழுவும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இவர்களை தவிர இரு மாநில வனத்துறை அதிகாரிகளும், காவலர்களும் இத்தேடுதல் வேட்டையில் இணைந்து செயல்பட்டனர்.இத்தேடுதல் வேட்டை நேற்று முன்தினம் அதிகாலை, 5 மணிக்கு துவங்கி, மாலை 6 மணி வரை, 200 சதுர கி.மீ., பரப்பளவுக்கு தேடுதல் வேட்டை நடந்தது. கேரளாவிலிருந்து, 38 பேர் கொண்ட போலீஸ் குழு தமிழகம் கொடைக்கானலுக்கு, 20ம் தேதி வந்தது. இவ்விரு மாநில குழுக்களும் பல குழுக்களாக பிரிந்து, தேடுதல் வேட்டை நடத்தினர். தேடுதல் வேட்டையில் எதுவும் கிடைக்கவில்லை என தெரிகிறது.