2006 மும்பை தொடர் குண்டு வெடிப்பு குற்றவாளிகள் 12 பேரை விடுவித்தது ஐகோர்ட்
2006 மும்பை தொடர் குண்டு வெடிப்பு குற்றவாளிகள் 12 பேரை விடுவித்தது ஐகோர்ட்
ADDED : ஜூலை 22, 2025 07:20 AM
மும்பை : மஹாராஷ்டிராவின் மும்பையில், 2006ல் நடந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 12 பேரையும் விடுவித்து மும்பை உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
குற்றஞ்சாட்டப்பட்டோருக்கு எதிராக அரசு தரப்பு போதிய ஆதாரங்களை சமர்ப்பிக்க தவறிவிட்ட தாக அந்த உ த்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை புறநகர் ரயில்களில் கடந்த 2006 ஜூலை 11ம் தேதி அடுத்தடுத்து ஏழு வெடிகுண்டுகள் வெடித்தன. 19 ஆண்டுகளுக்கு முன் நடந்த இந்த சம்பவத்தில் 189 பேர் உயிரிழந்தனர்; 800க்கும் மேற்பட்டோர் படுகாயம்அடைந்தனர்.
சங்கிலி தொடர் அதிக உயிர்சேதத்தை ஏற்படுத்தும் நோக்கில் பிரஷர் குக்கரில் வெடிகுண்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.
அலுவலக நேரம் முடிந்து மக்கள் வீடு திரும்பும் சமயத்தில், மாலை 6:24 மணிக்கு முதல் குண்டு வெடித்தது.
இதைத் தொடர்ந்து 11 நிமிட இடைவெளியில் சங்கிலி தொடர் போல அடுத்தடுத்து ஏழு குண்டுகள் வெடித்தன. கடைசி குண்டு 6:35 மணிக்கு வெடித்தது.
மும்பை, சர்ச்கேட் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து புறப்பட்ட புறநகர் ரயில்களின் முதல் வகுப்பு பெட்டியில் இந்த வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருந்தன.
மாட்டுங்கா சாலை, மாஹிம் ஜங்ஷன், கர் சாலை , ஜோகேஸ்வரி, பயாந்தர் மற்றும் போரிவாலி எ ன, ஏழு ரயில்வே ஸ்டேஷன்களில் இந்த குண்டுகள் வெடித்துச் சிதறின.
ஒட்டுமொத்த தேசத்தையே உலுக்கிய இந்த சங்கிலித்தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக, 12 பேர் கைது செய்யப்பட்டனர்.
வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், குற்றவாளிகளில் ஐந்து பேருக்கு மரண தண்டனையும், எஞ்சியவர்களுக்கு ஆயுள் தண்டனையும் விதித்து, 2015ல் தீர்ப்பளித்தது.
வரைபடங்கள் இந்நிலையில், தொடர் குண்டுவெடிப்பு வழக்கின் மேல்முறையீட்டு விசாரணை மும்பை உயர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இருதரப்பு வாதங்கள் முடிந்த நிலையில், நீதிபதிகள் அனில் கிலோர் மற்றும் ஷ்யாம் சண்டக் அடங்கிய அமர்வு இவ்வழக்கில் நேற்று தீர்ப்பளித்தது.
அதன் விபரம்:
இந்த வழக்கில், குற்றஞ்சாட்டப்பட்டோருக்கு எதிரான குற்றங்களை நிரூபிக்க அரசு தரப்பு முழுமையாக தவறிவிட்டது. குற்றஞ்சாட்டப்பட்டோர் தான் இந்த கொடுங்குற்றத்தை செய்தனரா என நம்புவது கடினமாக உள்ளது. எனவே சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அப்படியே ஓரங்கட்டிவிட்டு, அவர்களை இவ்வழக்கில் இருந்து விடுவிக்கிறோம்.
அவர்களுக்கு வேறு வழக்குகளில் தொடர்பு இல்லையெனில் உடனடியாக விடுதலை செய்யவும் உத்தரவிடுகிறோம். குண்டுவெடிப்பு நிகழ்ந்து, 100 நாட்கள் கடந்த பின், சந்தேகப்படும் நபரின் முகத்தை சாட்சிகள் நினைவில் வைத் திருப்பது முடியாத விஷயம்.
மேலும், விசாரணையின்போது பறிமுதல் செய்யப் பட்டதாக கூறப்படும் ஆயுதங்கள், வெடிகுண்டுகள், வரைபடங்கள், குண்டு வெடிப்பு வழக்குக்கு தொடர்பு இல்லாததாக இருக்கின்றன. வெடித்த குண்டுகள் என்ன வகையானது என்பதை கூட அரசு தரப்பு தெளிவுபடுத்தவில்லை.
எனவே, இவ்வழக்கில் சந்தேகத்தின் பலனை குற்றஞ்சாட்டப்பட்டோருக்கு வழங்கி, அவர்களை விடுவிக்க உத்தரவிடுகிறோம்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
மும்பை உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பால் குற்றஞ்சாட்டப்பட்ட 12 பேரும் விடுதலை செய்யப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.