அசாமில் எருமை மற்றும் பறவை சண்டைக்கு உயர் நீதிமன்றம் தடை
அசாமில் எருமை மற்றும் பறவை சண்டைக்கு உயர் நீதிமன்றம் தடை
ADDED : டிச 19, 2024 01:38 AM

குவஹாத்தி, அசாமில் எருமை மற்றும் புல்புல் பறவை இனத்துக்கு இடையே நடத்தப்படும் சண்டைக்கு, குவஹாத்தி உயர் நீதிமன்றம் நேற்று தடை விதித்தது.
வடகிழக்கு மாநிலமான அசாமில் ஆண்டுதோறும் எருமை மற்றும் புல்புல் எனப்படும் பறவை சண்டை நடத்தப்பட்டு வருகிறது.
பொதுமக்கள் மத்தியில் நடத்தப்படும் இந்த சண்டைக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, ஆண்டுதோறும் அறுவடை திருவிழாவான, 'மா பிஷ' பண்டிகை நடக்கும் ஜனவரி மாதத்தில் மட்டும் நடத்த மாநில அரசு அனுமதி அளித்தது.
இந்த உத்தரவை எதிர்த்தும், எருமை மற்றும் புல்புல் சண்டைக்கு தடை விதிக்கக் கோரியும், 'பீட்டா இந்தியா' அமைப்பான விலங்குகள் நல வாரியம் சார்பில் குவஹாத்தி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், 'அசாமில் நடத்தப்படும் எருமை மற்றும் புல்புல் சண்டைகள், விலங்குகள் மீதான வன்கொடுமை தடுப்பு சட்டம் 1960ஐ மீறுகிறது.
குறிப்பாக, இந்த புல்புல் சண்டை, வனவிலங்கு பாதுகாப்பு சட்டம், 1972ஐ மீறுகிறது. இது தொடர்பான வழக்கில், 2014ல் உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவை எதிர்த்து மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.
'இந்த சண்டையில் எருமைகளுக்கு அதிக காயம் ஏற்படுகின்றன. சண்டையில் ஈடுபடும் பறவைகளுக்கு போதிய உணவு கொடுக்கப்படாததால், அவை பட்டினியால் வாடுகின்றன. எனவே, இந்த சண்டைகளுக்கு தடை விதிக்க வேண்டும்' என, கூறப்பட்டது.
கடந்த ஜனவரியில் நடந்த சண்டையின் போது, எருமை மற்றும் பறவைகள் காயம் அடைந்தது தொடர்பான ஆவணங்களும், புகைப்படங்களும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. இதையடுத்து, எருமை மற்றும் புல்புல் சண்டைக்கு குவஹாத்தி உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இது குறித்து பீட்டா இந்தியாவின் முன்னணி சட்ட ஆலோசகர் அருணிமாக கேடியா கூறுகையில், “எருமைகள் மற்றும் புல்புல் பறவைகள் வலி மற்றும் பயத்தை உணரும் மென்மையான விலங்குகள்.
''கேலி செய்யும் கூட்டத்தின் நடுவே நடத்தப்படும் சண்டையால், அவற்றிற்கு கடுமையான ரத்தக் காயங்கள் ஏற்படுகின்றன. பீட்டா அமைப்பின் கோரிக்கையை ஏற்று, சண்டைக்கு தடை விதித்த குவஹாத்தி உயர் நீதிமன்றத்துக்கு நன்றி,” என்றார்.