சுகாதாரம் இல்லாத கழிப்பறைகள் மாநகராட்சிக்கு ஐகோர்ட் கண்டனம்
சுகாதாரம் இல்லாத கழிப்பறைகள் மாநகராட்சிக்கு ஐகோர்ட் கண்டனம்
ADDED : ஜூலை 02, 2025 10:05 PM
புதுடில்லி:'பொது கழிப்பறைகளை பராமரிப்பதில் மாநகராட்சிக்கு அக்கறை இல்லை' என உயர்நீதிமன்றம் கண்டித்துள்ளது.
புதுடில்லியைச் சேர்ந்த, 'ஜன் சேவா வெல்பேர் சொசைட்டி' என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனு:
நாட்டின் தலைநகரான டில்லியில், சுத்தமான தண்ணீர், மின்சார வசதியுடன் கூடிய சுகாதாரமான பொது கழிப்பறைகள் இல்லை. கழிப்பறை பராமரிப்பில் மாநகராட்சி அக்கறை காட்டவில்லை. பொதுக் கழிப்பறை சுகாதாரமாக பராமரிக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டு, மனுவுடன் கழிப்பறைகளின் போட்டோக்களும் சமர்ப்பிக்கப்பட்டன.
இந்த மனுவை, தலைமை நீதிபதி டி.கே. உபாத்யாயா மற்றும் நீதிபதி துஷார் ராவ் கெடேலா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. போட்டோக்களை ஆய்வு செய்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
டில்லி மாநகரில் பொதுக் கழிப்பறைகள் மிகவும் மோசமான நிலையில் இருப்பது துன்பகரமானது. பொதுக் கழிப்பறைகளை பராமரிப்பதில் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் மேம்பாட்டு அமைப்புகளின் அக்கறையின்மை மற்றும் கடமை தவறுதலை இந்தப் போட்டோக்கள் தெளிவாக உணர்த்துகின்றன.
பொதுமக்களுக்கு தேவையான வசதிகளை செய்து தர, அதிகாரிகளுக்கு மீண்டும் மீண்டும் நினைவூட்ட வேண்டிய அவசியம் இல்லை என நீதிமன்றம் கருதுகிறது. மாநகராட்சி, டில்லி மேம்பாட்டு ஆணையம், புதுடில்லி முனிசிபல் கவுன்சில் ஆகியவை மக்களின் வரிப்பணத்தில் செயல்படுகின்றன. அதிகாரிகளின் அக்கறை இன்மையால், பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளும் அதிகரிக்கின்றன.
பொது சேவைகள் மக்கள் பயன்படுத்தக்கூடியதாக இருப்பதை உறுதி செய்ய, நிபுணர் குழு பரிந்துரை வழங்க உத்தரவிடப்படுகிறது. பொதுக் கழிப்பறைகள் சீரமைக்கப்பட்டு சுத்தமாக பராமரிக்கப்படுவதை, மாநகராட்சி, புதுடில்லி முனிசிபல் கவுன்சில் மற்றும் டில்லி மேம்பாட்டு ஆணையம் ஆகியவை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.