அரசு பள்ளியில் ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழா எதிரொலி: கர்நாடகா அரசின் உத்தரவுக்கு இடைக்கால தடை
அரசு பள்ளியில் ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழா எதிரொலி: கர்நாடகா அரசின் உத்தரவுக்கு இடைக்கால தடை
ADDED : அக் 28, 2025 01:47 PM

பெங்களூரு: அரசுப் பள்ளிகள் மற்றும் கல்லூரி வளாகங்களில் தனியார் அமைப்புகள் அல்லது நிறுவனங்கள், தங்களின் நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு முன் அனுமதி பெற வேண்டும் என்ற கர்நாடகா அரசின் உத்தரவுக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.
கலபுரகியில் உள்ள அரசு பள்ளி வளாகத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இதற்கு ஆளும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும், கர்நாடக அமைச்சர் பிரியங்க் கார்கே, கர்நாடகாவில் ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இதையடுத்து, எந்தவொரு தனியார் அமைப்புகள் அல்லது தனியார் நிறுவனங்கள், அரசு பள்ளிகள்,கல்லூரிகளின் மைதானங்களில் தங்களில் கலாசார நிகழ்ச்சிகளை நடத்த விரும்பினால், அது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும். அதுமட்டுமில்லாமல், மாவட்ட நிர்வாகத்திடமும் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கர்நாடகா காங்கிரஸ் அரசு உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவை எதிர்த்து கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அரசின் இந்த உத்தரவு தனியார் அமைப்புகள் மற்றும் நிறுவனங்களின் உரிமைகளை பாதிப்பதாக குறிப்பிட்டிருந்தது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, தனியார் நிகழ்ச்சிகளை அரசுப் பள்ளிகள் மற்றும் கல்லூரி வளாகங்களில் நடத்துவதற்கு அனுமதி பெற வேண்டும் என்ற கர்நாடகா அரசின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. மேலும், இது தொடர்பாக அடுத்தகட்ட விசாரணையை நவ.,17ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

