பூங்காவில் செல்லப்பிராணிகள் மலம் கழித்தால்... வழிகாட்டுதல்களை வெளியிட்டது உயர் நீதிமன்றம்
பூங்காவில் செல்லப்பிராணிகள் மலம் கழித்தால்... வழிகாட்டுதல்களை வெளியிட்டது உயர் நீதிமன்றம்
ADDED : நவ 28, 2024 12:44 AM
பெங்களூரு, 'பூங்காவிற்கு அழைத்து வரும்போது செல்லப் பிராணிகள் மலம் கழித்தால், அதை அகற்ற உரிமையாளர்களே கைப்பைகளை கொண்டு வர வேண்டும்' என, பெங்களூரு உயர் நீதிமன்றம் வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
பூங்கா நகரம் என்று அழைக்கப்படும் பெங்களூரில், செல்லப் பிராணிகளை வளர்ப்பவர்கள் அதை பூங்காக்களுக்கு விளையாட அழைத்து வருவது வழக்கம். அப்போது சில பிராணிகள் அங்கு மலம் கழிப்பது, நடைபயிற்சி செய்பவர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.
இந்நிலையில், பூங்காவிற்கு செல்லப் பிராணிகளை அழைத்து வருபவர்கள், அவற்றின் கழிவுகளை அகற்ற, கைப்பையை கொண்டு வருவதை கட்டாயமாக்கும்படி, மாநகராட்சிக்கு உத்தரவிடக்கோரி, உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை, தலைமை நீதிபதி அன்ஜரியா நேற்று தள்ளுபடி செய்தார். ஆனால், சில வழிகாட்டுதல்களை வழங்கி உத்தரவிட்டார்.
அதன் விபரம்:
துாய்மை மற்றும் பிற விதிகளை மீறுபவர்களை விட, மலம் கழிக்கும் செல்லப் பிராணிகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் அதிகமாக இருக்க வேண்டும்
செல்லப் பிராணிகளின் மலக் கழிவுகளை அகற்ற, கைப்பைகளை உரிமையாளர்கள் கொண்டு வர வேண்டும்
கர்நாடக பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள், திறந்தவெளி பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாட்டு சட்டம் ஆகியவை, மாநகராட்சி அதிகாரிகளால் நடைமுறைப்படுத்த வேண்டும்
திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2016ஐ, மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். இந்த விதிகளில் திருத்தம் செய்ய மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்
பூங்காக்களின் பராமரிப்பு மற்றும் பராமரிப்புக்கு தேவையான பட்ஜெட்டை, அரசு உட்பட சம்பந்தப்பட்ட துறைகள் ஒதுக்க வேண்டும்
தோட்டக்கலைத் துறையும், மாநகராட்சியும் இணைந்து பூங்காக்களை பராமரிக்க நிரந்தர வழிமுறையை உருவாக்க வேண்டும்
பூங்காக்களை பாதுகாப்பதற்கும், கண்காணிப்பதற்கும் குழுக்களை நியமிப்பதற்கு தகுந்த விதிகளை அறிமுகப்படுத்துவதற்கும் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவதற்கும் மாநகராட்சி விதிகளில் தேவையான திருத்தங்கள் செய்யலாம்
தோட்டக்கலைத் துறையை சார்ந்த ஒரு அதிகாரியும், மாநகராட்சியில் இரண்டு அதிகாரிகளும் அடங்கிய மூன்று பேர் குழுவை அமைக்க வேண்டும். இந்தக் குழு துப்புரவு நடவடிக்கைகள் திறம்பட செயல்படுவதை உறுதிசெய்ய வேண்டும்.
இவ்வாறு உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.