படத்துக்காக மரம் வெட்டிய வழக்கு இடைக்கால தடை விதித்த ஐகோர்ட்
படத்துக்காக மரம் வெட்டிய வழக்கு இடைக்கால தடை விதித்த ஐகோர்ட்
ADDED : டிச 06, 2024 06:33 AM
பெங்களூரு: 'டாக்சிக்' படத்துக்காக வனப்பகுதியில் இருந்த மரங்கள் வெட்டப்பட்ட வழக்கில், திரைப்பட தயாரிப்பு நிறுவனத்திடம் விசாரணை நடத்த, உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
'கே.ஜி.எப்.,' நடிகர் யஷ் நடிக்கும் 'டாக்சிக்' திரைப்படத்தை, கே.வி.என்., மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் தயாரித்து வருகிறது. இப்படத்துக்காக, ஜாலஹள்ளியில், வனப்பகுதியில், மரங்களை வெட்டியதாக, நவ., 6ல் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் மீது வனத்துறையினர் வழக்கு தொடர்ந்தனர்.
இவ்வழக்கை ரத்து செய்ய கோரி, உயர் நீதிமன்றத்தில் தயாரிப்பு நிறுவனத்தினர் மனு தாக்கல் செய்தனர்.
இம்மனு, நீதிபதி நாகபிரசன்னா அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'பீன்யா வனப்பகுதியில் உள்ள 433 ஏக்கர் நிலம், எச்.எம்.டி., எனும் ஹிந்துஸ்தான் மிஷின் டூல்ஸ் நிறுவனத்துக்கு, 1963ல் மைசூரு அரசால் வழங்கப்பட்டது. இதில், எச்.எம்.டி., நிறுவனம், 18.2 ஏக்கர் நிலத்தை, கனரா வங்கிக்கு விற்றது. இந்த இடத்தை, திரைப்பட தயாரிப்பு நிறுவனம், குத்தகைக்கு எடுத்து, 'டாக்சிக்' திரைப்பட படப்பிடிப்புக்கு செட் அமைத்தது. ஆனால், இப்பகுதி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்று வழக்கு பதிவு செய்துள்ளனர்' என்றார்.
அதற்கு அரசு தரப்பு மாநில கூடுதல் வழக்கறிஞர் ஜெகதீஷ், 'அங்கிருந்த மரங்கள் வெட்டப்பட்டுள்ளன,' என்றார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தயாரிப்பு நிறுவனம் மீதான விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து, வழக்கு விசாரணையை, நான்கு வாரங்களுக்கு தள்ளி வைத்தார்.