சி.ஏ.ஜி., அறிக்கை நிலுவை விவகாரம் டில்லி அரசுக்கு ஐகோர்ட் 'நோட்டீஸ்'
சி.ஏ.ஜி., அறிக்கை நிலுவை விவகாரம் டில்லி அரசுக்கு ஐகோர்ட் 'நோட்டீஸ்'
ADDED : டிச 25, 2024 12:31 AM
புதுடில்லி:சட்டசபையில் சிறப்புக் கூட்டம் நடத்தி, சி.ஏ.ஜி., எனப்படும் மத்திய தலைமைக் கணக்கு அதிகாரியின் அறிக்கைகளை தாக்கல் செய்வது குறித்து, பா.ஜ., தாக்கல் செய்துள்ள மனுவுக்கு பதில் அளிக்குமாறு டில்லி அரசு மற்றும் துணைநிலை கவர்னர் பதில் அளிக்குமாறு டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மத்திய தலைமைக் கணக்கு அதிகாரி அளித்த 14 அறிக்கைகளை சட்டசபையில் தாக்கல் செய்ய வேண்டும் என, பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், ஆம் ஆத்மி அரசு அதைக் கண்டுகொள்ளவில்லை. துணைநிலை கவர்னர் சக்சேனாவும், முதல்வராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் தற்போதைய முதல்வர் ஆதிஷி சிங் ஆகியோருக்கு கடிதம் எழுதி அறிவுறுத்தினார். ஆனால், அதையும் அரசு கண்டுகொள்ளவில்லை.
இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் விஜேந்தர் குப்தா, பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் மோகன் சிங் பிஷ்ட், ஓம் பிரகாஷ் சர்மா, அஜய் குமார் மஹாவர், அபய் வர்மா, அனில் குமார் பாஜ்பாய் மற்றும் ஜிதேந்திர மகாஜன் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
அதில், சட்டசபையில் சிறப்புக் கூட்டம் நடத்தில் நிலுவையில் உள்ள மத்திய தலைமைக் கணக்கு அதிகாரியின் 14 அறிக்கைகளை தாக்கல் செய்ய டில்லி அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்த மனு, நீதிபதி சஞ்சீவ் நருலா முன் விசாரணைக்கு வந்தது.
மனுதாரர்களின் கோரிக்கை குறித்து துணைநிலை கவர்னர், சபாநாயகர், முதல்வர், டில்லி அரசின் தலைமைச் செயலர் மற்றும் மத்திய தலைமை கணக்கு தணிக்கையாளர் அலுவலகம் பதில் அளிக்க நீதிபதி உத்தரவிட்டார். விசாரணை ஜனவரி 8ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.