அரசு மருத்துவமனையில் மருந்து இல்லை அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் 'நோட்டீஸ்'
அரசு மருத்துவமனையில் மருந்து இல்லை அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் 'நோட்டீஸ்'
ADDED : நவ 01, 2025 09:58 PM
புதுடில்லி: நோயாளிகளுக்கு தேவையான அத்திவாசிய மருத்துவ வசதிகள் இல்லை என்ற குற்றச்சாட்டு தொடர்பாக, பதில் அளிக்குமாறு புதுடில்லி ராம் மனோகர் லோஹியா மருத்துவமனைக்கு டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரசு சாராத, 'குடும்ப்ப்' தொண்டு நிறுவனம், டில்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனு:
ராம் மனோகர் லோகியா அரசு மருத்துவமனையிலும், அடல் பிஹாரி வாஜ்பாய் மருத்துவ அறிவியல் நிறுவன மருத்துவமனையிலும் நோயாளிகளுக்கு தேவைப்படும் அத்தியாவசிய மருந்துகள், உயிர்காக்கும் மருந்துகள் மற்றும் பாதுகாப்பான இரத்தமாற்ற வசதிகள் இல்லை.
தேவையான நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
இந்த மனு, நீதிபதிகள் பிரதிபா எம். சிங் மற்றும் மன்மீத் பிரீதம் சிங் அரோரா ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
தொண்டு நிறுவனம் சார்பில், வழக்கறிஞர் ருத்ரா விக்ரம் சிங் ஆஜராகி, ''இரு மருத்துவமனைகளிலும் நோயாளிகளுக்கு தேவையான அத்தியவாசிய மருந்துகள், உயிர்காக்கும் மருந்துகள் இல்லை.
''மேலும், பாதுகாப்பற்ற முறையில் ரத்த மாற்றம் செய்யப்படுகிறது. ஏழைகள் தங்களுக்கு தேவையான மருந்துகளை வெளியில் விலைக்கு வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்,” என்றார்.
நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
மனுதாரரின் குற்றச்சாட்டுகள் குறித்து, ராம் மனோகர் லோகியா மருத்துவமனை கண்காணிப்பாளர் மற்றும் அடல் பிஹாரி வாஜ்பாய் மருத்துவ அறிவியல் நிறுவன இயக்குனர் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த வழக்கில் அடுத்த விசாரணை டிசம்பர் 17ல் நடத்தப்படும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

