சுப்ரீம் கோர்ட் கொலிஜியத்திடம் விளக்கம் அளித்த அலகாபாத் ஐகோர்ட் நீதிபதி
சுப்ரீம் கோர்ட் கொலிஜியத்திடம் விளக்கம் அளித்த அலகாபாத் ஐகோர்ட் நீதிபதி
UPDATED : டிச 17, 2024 10:26 PM
ADDED : டிச 17, 2024 10:23 PM

புதுடில்லி: விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு நடத்திய நிகழ்ச்சியில் பங்கேற்று பேசியது தொடர்பாக அலகாபாத் ஐகோர்ட் நீதிபதி சேகர் யாதவ் , சுப்ரீம் கோர்ட் கொலிஜியம் முன்பு ஆஜராகி விளக்கம் அளித்தார்.
உ.பி.,யின் பிரயாக்ராஜ் நகரில் வி.எச்.பி., எனப்படும் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு, சமீபத்தில் நடத்திய நிகழ்ச்சியில் அலகாபாத் ஐகோர்ட் நீதிபதி சேகர் குமார் யாதவ் பேசுகையில், பெரும்பான்மையினராக உள்ள ஹிந்துக்களின் விருப்பப்படியே இந்த நாடு செயல்படும். ஒரு குறிப்பிட்ட சமூகத்தில் குழந்தைகளின் கண் எதிரே விலங்குகள் கொல்லப்படுகின்றன. இதை பார்த்து அந்த குழந்தைகள் வளர்கின்றனர். இந்த சூழ்நிலையில், அந்த குழந்தைகள் எப்படி கனிவாகவும், சகிப்புத்தன்மையுடனும் இருப்பர்? அந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அனைவரும் மோசமானவர்கள் இல்லை என்றாலும், சிலர் ஆபத்தானவர்கள். இவ்வாறு நீதிபதி பேசினார்.
இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவுக்கு கடிதம் எழுதப்பட்டது.
இது தொர்பாக சுப்ரீம் கோர்ட் வெளியிட்ட செய்தியில், அலகாபாத் ஐகோர்ட் நீதிபதி சேகர் குமார் யாதவ் நிகழ்ச்சி ஒன்றில் பேசியது பத்திரிகைகள் வாயிலாக நீதிமன்றத்தின் கவனத்திற்கு வந்துள்ளது. நீதிபதி நிகழ்ச்சியில் பேசிய விபரங்கள் அலகாபாத் ஐகோர்ட்டிடம் கேட்கப்பட்டு உள்ளன. இந்த விவகாரம் பரிசீலனையில் உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
நீதிமன்ற விதிகளின்படி, சர்ச்சைக்குரிய வகையில் பேசியது தொடர்பாக அறிக்கை கேட்கப்பட்ட நீதிபதி, கொலிஜியம் முன்பு ஆஜராகி விளக்கம் அளிக்க வாய்ப்பு அளிக்கப்படும்.
இந்நிலையில், டில்லி வந்த சேகர்குமார் யாதவ், சுப்ரீம் கோர்ட் கொலிஜியம் முன்பு ஆஜராகி சர்ச்சைக்குரிய வகையில் பேசியது தொடர்பாக தனது தரப்பு விளக்கத்தை அளித்தது தெரியவந்துள்ளது.