பணிகளுக்கு ஆள் சேர்ப்பில் முறைகேடு அரசுக்கு உயர் நீதிமன்றம் சாட்டையடி
பணிகளுக்கு ஆள் சேர்ப்பில் முறைகேடு அரசுக்கு உயர் நீதிமன்றம் சாட்டையடி
ADDED : மார் 20, 2025 04:43 AM
பெங்களூரு,: ஊரக வளர்ச்சி துறையில் உதவி இன்ஜினியர்கள் பணிகளுக்கு ஆள்சேர்ப்பில் முறைகேடு நடந்தது தொடர்பாக, காங்கிரஸ் அரசுக்கு, உயர் நீதிமன்றம் சாட்டையடி கொடுத்து உள்ளது.கர்நாடக அரசின் ஊரக வளர்ச்சி துறையில் உதவி பொறியாளர்கள் நியமனத்தில் முறைகேடு நடக்கிறது.
இதில் ஊரக வளர்ச்சி, கர்நாடக பொது சேவை ஆணையத்திற்கு தொடர்பு உள்ளது என்று, சமூக ஆர்வலர் விஸ்வாஸ், உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் கிருஷ்ணா தீட்சித், ராமசந்திர ஹுடார் விசாரிக்கின்றனர்.
நேற்று முன்தினம் நடந்த விசாரணையில், கர்நாடக பொது சேவை ஆணையம் சார்பில் ஆஜரான வக்கீல் ராபின் ஜேக்கப் வாதிடுகையில், 'ஊரக வளர்ச்சி துறையில் உதவி இன்ஜினியர்கள் நியமனத்தில் நடந்த முறைகேடு குறித்து விசாரிக்க, கர்நாடக பொது சேவை ஆணையத்தின் மூன்று உறுப்பினர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது.
இதுபற்றி தலைமை செயலருக்கு எழுத்துபூர்வ தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அனைத்து தகவலும் அரசிடம் உள்ளது' என்றார்.
ஆணவ மனப்பான்மை
கர்நாடக பொது சேவை ஆணையம் விசாரணை நடத்தி வரும் போது, ஆள்சேர்ப்பு அறிவிப்பு வெளியிட்டது ஏன் என்று, அரசின் அட்வகேட் ஜெனரல் சசிகிரண் ஷெட்டியை பார்த்து, நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
உதவி இன்ஜினியர்கள் பணியிடங்களுக்கு மிகப்பெரிய தேவை இருந்தது. இதனால் ஆள்சேர்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டது என்று, சசிகிரண் ஷெட்டி கூறினார்.
இந்த பதிலால் கோபம் அடைந்த நீதிபதிகள், 'ஆட்கள் தேவை என்றால் சந்தையில் அமர்ந்து இருப்பவர்களை ஒன்று திரட்டுங்கள்.
எஸ்.எஸ்.எல்.சி., படித்தவர்களுக்கு கூட இப்போது அனைத்து தொழிலும் தெரிகிறது. மிஸ்டர் அட்வகேட் பொறுப்புடன் பதில் சொல்லுங்கள்.
நாம் என்ன நினைத்தாலும் நடக்கும் என்று கூறும் ஆணவ மனப்பான்மையுடன் இருப்பவர்கள் முதலில் அந்த எண்ணத்தை மாற்றி கொள்ளட்டும்.
'நீங்கள் என்ன செய்தாலும் பார்த்து கொண்டு நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம்.
இங்கு அரசு, பொது சேவை ஆணையத்தின் தோல்வி அம்பலமாகி உள்ளது.இந்த வழக்கில் சி.ஐ.டி.,யால் எதுவும் செய்ய முடியாது. ஏன் என்றால் அவர்கள், மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளனர்.
இதனால் வழக்கை சி.பி.ஐ.,க்கு ஒப்படைப்பது குறித்து உரிய நேரத்தில் முடிவு எடுப்போம்' என்றனர்.
மனு மீதான அடுத்த விசாரணையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.