விமான நிலையம் அருகில் இறைச்சி மையம் மத்திய, மாநில அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்
விமான நிலையம் அருகில் இறைச்சி மையம் மத்திய, மாநில அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்
ADDED : டிச 05, 2024 07:17 AM
கலபுரகி: கலபுரகி விமான நிலையத்தின் 10 கி.மீ., சுற்றளவில் இறைச்சிக் கடை அமைப்பது தொடர்பாக, மத்திய விமானத்துறை, மாநில அரசு, மாநில மாசு கட்டுப்பாட்டு ஆணையம் ஆகியவற்றுக்கு, கர்நாடக உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
இதுதொடர்பாக கலபுரகி சேர்ந்த சமூக ஆர்வலர், கர்நாடக உயர் நீதிமன்றத்தின் கலபுரகி கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில் அவர் கூறியிருந்ததாவது:
விமான நிலைய சட்டம் - 1943ன்படி, விமான நிலையத்தில் இருந்து 10 கி.மீ., சுற்றளவுக்குள் எந்த இறைச்சிக் கடையும் இருக்கக்கூடாது.
ஆனால், இதை பொருட்படுத்தாமல், மாநில மாசு கட்டுப்பாட்டு ஆணையம், மலகட்டி கிராமத்தில், இறைச்சிக் கூட மையம் அமைக்க, மும்பையைச் சேர்ந்த தனியார் எக்ஸ்போர்ட் நிறுவனத்துக்கு அனுமதி அளித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு எழுந்தால், அந்த உத்தரவை ரத்து செய்தது. திடீரென, ரத்து செய்யப்பட்ட உத்தரவு வாபஸ் பெறுவதாக, 2024 பிப்., 28ல் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இம்மனு, தலைமை நீதிபதி அஞ்சாரியா, நீதிபதி அரவிந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இந்த மனு தொடர்பாக பதில் மனுத்தாக்கல் செய்யும்படி, மத்திய விமானத்துறை அமைச்சகம், மாநில முதன்மை செயலர், வருவாய் துறை, கிராம மேம்பாட்டு துறை, மாநில மாசு கட்டுப்பாட்டு ஆணையம், கலபுரகி மாவட்ட கலெக்டர், மாவட்ட பஞ்சாயத்து முதன்மை அதிகாரி, மும்பையை சேர்ந்த நிறுவனம் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். அத்துடன், இம்மனு விசாரணையை, வரும் 16ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.