'மாஜி' எம்.எல்.ஏ., ஜாமின் மனு போலீசுக்கு ஐகோர்ட் உத்தரவு
'மாஜி' எம்.எல்.ஏ., ஜாமின் மனு போலீசுக்கு ஐகோர்ட் உத்தரவு
ADDED : ஜூன் 25, 2025 09:39 PM
புதுடில்லி:ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ., நரேஷ் பல்யான் தாக்கல் செய்துள்ள ஜாமின் மனுவுக்கு, பதிலளிக்க டில்லி மாநகரப் போலீசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுடில்லி உத்தம் நகர் தொகுதி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,வாக, 2015 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளில் வெற்றி பெற்றவர் நரேஷ் பல்யான். தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறித்ததாக நரேஷ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, 2024ம் ஆண்டு டிசம்பர் 4ம் தேதி கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், மே மாதம் தாக்கல் செய்த ஜாமின் மனுவை நீதிமன்றம் நிராகரித்தது. இதையடுத்து, உயர் நீதிமன்றத்தில் ஜாமின் மனு தாக்கல் செய்தார்.
பல்யான் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சுனில் தலால், பல்யான் மீது சாட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரமும் இல்லை. இதும் முற்றிலும் ஜோடிக்கப்பட்ட வழக்கு. முதல் தகவல் அறிக்கையில் நரேஷ் பல்யானின் பெயர் கூட குறிப்பிடப்படவில்லை,”என வாதிட்டார்.
போலீஸ் தரப்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர், 'மஹாராஷ்டிரா ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கட்டுப்பாட்டுச் சட்டப் பிரிவின் கீழ் நரேஷ் பல்யான் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த சட்டப் பிரிவில் கைது செய்யப்பட்டவருக்கு ஜாமின் வழங்க முடியாது. தொடர்ச்சியாக சட்டவிரோத நடவடிக்கையில் நரேஷ் ஈடுபட்டுள்ளார். எனவே, ஜாமின் வழங்கக் கூடாது' என வாதிட்டார்.
இரு தரப்ப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி மனோஜ் ஜெயின், நரேஷ் பல்யான் தாக்கல் செய்துள்ள ஜாமின் மனு குறித்து டில்லி மாநகரப் போலீல் பதில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.