ஓலா, ஊபர் சேவையை ஆறு வாரம் நிறுத்தி வைக்க ஐகோர்ட் உத்தரவு
ஓலா, ஊபர் சேவையை ஆறு வாரம் நிறுத்தி வைக்க ஐகோர்ட் உத்தரவு
ADDED : ஏப் 03, 2025 08:01 AM
பெங்களூரு : கர்நாடகாவில் 'ஊபர், ஓலா, ராபிடோ' ஆகிய நிறுவனங்கள் அளித்து வரும் பைக் டாக்சி சேவைகளை ஆறு வாரம் நிறுத்தி வைக்க, உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில், காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, 'ஊபர், ஓலா, ராபிடோ' உள்ளிட்ட நிறுவனங்கள், பைக் டாக்சி சேவை அளித்து வருகின்றன.
பைக்குகளை பொதுப்பயன்பாட்டு வாகனங்களாக பதிவு செய்வதற்காக, 2022ல் கர்நாடக அரசிடம், ஊபர் இந்தியா சிஸ்டம்ஸ் பிரைவேட் லிமிடெட் உள்ளிட்ட நிறுவனங்கள் விண்ணப்பித்திருந்தன.
ஆனால் அரசு கண்டுகொள்ளவில்லை. விண்ணப்பத்தை பரிசீலிக்க அரசுக்கு உத்தரவிடும்படி உயர் நீதிமன்றத்தில், ஊபர் இந்தியா உள்ளிட்ட நிறுவனம் சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இதை நேற்று விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி பி.எம். ஷியாம் பிரசாத் உத்தரவிட்டதாவது:
மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ், மாநில அரசு முறையான வழிகாட்டுதல்களை அறிவிக்கும் வரை பைக் டாக்சிகள் இயங்க முடியாது. அதனால், அடுத்த ஆறு வாரங்களுக்குள், கர்நாடகாவில், பைக் டாக்சி சேவைகளை நிறுத்த வேண்டும்.
இதை மாநில அரசு கண்காணிக்க வேண்டும். அதே சமயம், இந்த விவகாரத்தில் மாநில அரசு வழிகாட்டுதல்களை உருவாக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து பைக் டாக்சி நிறுவனங்கள் மேல் முறையீடு செய்யவுள்ளதாகக் கூறப்படுகிறது.

