தலைமை கணக்காளர் அறிக்கை தீர்ப்பை ஒத்திவைத்தது ஐகோர்ட்
தலைமை கணக்காளர் அறிக்கை தீர்ப்பை ஒத்திவைத்தது ஐகோர்ட்
ADDED : ஜன 16, 2025 09:35 PM
இந்தியா கேட்:தலைமை கணக்குத் தணிக்கையாளர் அறிக்கையை டில்லி சட்டசபையில் தாக்கல் செய்ய மாநில அரசுக்கு உத்தரவிடும்படி பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பை உயர் நீதிமன்றம் நேற்று ஒத்திவைத்தது.
டில்லி மாநில அரசின் செலவினங்கள் தொடர்பாக தலைமை கணக்குத் தணிக்கையாளர் அறிக்கையில் பல்வேறு குற்றச்சாட்டுக்களை கூறியிருப்பதாக தகவல் வெளியானது. இந்த அறிக்கையை முதல்வர் ஆதிஷி தலைமையிலான ஆம் ஆத்மி அரசு சட்டசபையின் கடைசிக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யவில்லை.
இதையடுத்து டில்லி உயர் நீதிமன்றத்தில் பா.ஜ.,வைச் சேர்ந்த சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் விஜேந்தர் குப்தா, பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் மோகன் சிங் பிஷ்ட், ஓம் பிரகாஷ் சர்மா, அஜய் குமார் மஹாவர், அபய் வர்மா, அனில் குமார் பாஜ்பாய், ஜிதேந்திர மகாஜன் ஆகியோர் ஒரு வழக்கு தொடர்ந்தனர்.
மனுவில், தலைமை கணக்குத் தணிக்கையாளர் அறிக்கையை சட்டசபையில் தாக்கல் செய்ய மாநில அரசுக்கு உத்தரவிடவும் அறிக்கையை தாக்கல் செய்வதற்கு வசதியாக சிறப்பு சட்டசபைக் கூட்டத்தொடரை கூட்ட சபாநாயகருக்கு உத்தரவிடவும் அவர்கள் கோரியிருந்தனர்.
நீதிபதி சச்சின் தத்தா தலைமையிலான அமர்வு முன்னிலையில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.
கடந்த 13ம் தேதி நடந்த விசாரணையின்போது, “தலைமை கணக்குத் தணிக்கையாளர் அறிக்கைகளை உடனடியாக சட்டசபையில் விவாதத்திற்காக வைத்திருக்க வேண்டும். மாநில அரசு இந்த விவகாரத்தை இழுத்தடிப்பது, அதன் நேர்மையில் சந்தேகங்களை எழுப்பியது,” என, நீதிபதி கருத்துத் தெரிவித்திருந்தார்.
அரசாங்கம் இந்த விஷயத்தை தாமதப்படுத்துவதாகக் குற்றஞ்சாட்டிய பா.ஜ., வழக்கறிஞர்கள் நீரஜ், சத்ய ரஞ்சன் ஸ்வைன், 'வரவிருக்கும் சட்டசபை தேர்தல் வேளையில், தலைமை கணக்குத் தணிக்கையாளர் அறிக்கைகள் தாக்கல் செய்வதே பொருத்தமானதாக இருக்கும்' என்றனர்.
பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்களின் கோரிக்கையை நிராகரிக்கும்படி, சபாநாயகர் மற்றும் மாநில அரசின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் எதிர்த்தனர். 'சட்டசபைத் தேர்தல்கள் விரைவில் நடைபெறவிருக்கும் இந்த கட்டத்தில் அறிக்கைகளை தாக்கல் செய்ய எந்த அவசரமும் இல்லை' என்றனர்.
இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், 'பிப்ரவரியில் சட்டசபையின் பதவிக்காலம் முடிவடையும் நிலையில், சட்டசபையில் தலைமை கணக்குத் தணிக்கையாளரின் அறிக்கைகளை தாக்கல் செய்வதில் எந்த பயனுள்ள நோக்கமும் இல்லை. மேலும் சட்டசபையின் செயல்பாடுகள் தொடர்பான விஷயங்களில் சபாநாயகருக்கு எந்த நீதித்துறை உத்தரவையும் பிறப்பிக்க முடியாது' என, சட்டசபைச் செயலகம் தெரிவித்திருந்தது.
அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவுபெற்ற நிலையில் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி சச்சின் தத்தா நேற்று ஒத்திவைத்தார்.