ஆம் ஆத்மி தேர்தல் வாக்குறுதி வழக்கு அவசரமாக விசாரிக்க ஐகோர்ட் மறுப்பு
ஆம் ஆத்மி தேர்தல் வாக்குறுதி வழக்கு அவசரமாக விசாரிக்க ஐகோர்ட் மறுப்பு
ADDED : ஜன 21, 2025 07:37 PM
இந்தியாகேட்:ஆம் ஆத்மி கட்சி தேர்தல் வாக்குறுதிகளுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை அவசரமாக விசாரிக்க டில்லி உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
முதல்வரின் பெண்கள் திட்டத்தின் கீழ் பெண்களுக்கு மாதந்தோறும் 2,100 உதவித்தொகை வழங்குவதாக ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த உறுதிமொழியை எதிர்த்து டில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு கடந்த 10ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் யாரும் ஆஜராகவில்லை. இதையடுத்து மனுதாரருக்காக நீதிபதி காத்திருந்தார். ஆனாலும் யாரும் ஆஜராகாததால் மனு மீதான விசாரணையை வரும் 30ம் தேதிக்கு நீதிபதி ஜோதி சிங் ஒத்திவைத்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் நீதிபதி முன்னிலையில் மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், வாக்காளர்களை பாதிக்கும் வகையில் ஆம் ஆத்மி கட்சி, இந்த திட்டத்தை தொடர்ந்து ஊக்குவிப்பதாகக் கூறி, மனுவை அவசரமாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும்படி கோரிக்கை விடுத்தார்.
போதுமான காரணங்கள் இல்லை என்று கூறி, இந்த கோரிக்கையை நீதிபதி ஜோதி சிங் நிராகரித்தார். ஏற்கனவே அறிவித்தபடி இந்த வழக்கு வரும் 30ம் தேதியே விசாரணைக்கு வருமென தெரிகிறது.