உயர் நீதிமன்றம் ரூ.10,000 அபராதம் சுப்ரீம் கோர்ட்டில் சித்தராமையா அப்பீல்
உயர் நீதிமன்றம் ரூ.10,000 அபராதம் சுப்ரீம் கோர்ட்டில் சித்தராமையா அப்பீல்
ADDED : பிப் 15, 2024 04:38 AM
பெங்களூரு : உயர் நீதிமன்றம் தனக்கு, 10,000 ரூபாய் அபராதம் விதித்ததை எதிர்த்து, முதல்வர் சித்தராமையா உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
கடந்த பா.ஜ., ஆட் சியில், அரசு ஒப்பந்ததாரர் சந்தோஷ் தற்கொலை செய்து கொண்டார். இவர் எழுதி வைத்திருந்த கடிதத்தில், அன்றைய அமைச்சர் ஈஸ்வரப்பா, 40 சதவீதம் கமிஷன் கேட்டு நெருக்கடி கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
எனவே அவரை அமைச்சரவையில் இருந்து நீக்கும்படி வலியுறுத்தி, 2022 ஏப்ரல் 14ல், காங்கிரஸ் போராட்டம் நடத்தியது.
அப்போது, எதிர்க்கட்சி தலைவராக இருந்த சித்தராமையா தலைமையில், பெங்களூரின் ரேஸ் கோர்ஸ் சாலையில், வியூ ஹோட்டல் அருகில், போராட்டம் நடந்தது. பல ஆயிரம் பேர் குவிந்ததால், போக்குவரத்து பாதிப்படைந்தது. பொது மக்கள் தொந்தரவுக்கு ஆளாகினர்.
இந்த போராட்டத்தால், மக்கள் பாதிக்கப்பட்டது குறித்து, ஹைகிரவுண்ட் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவானது.
இந்த வழக்கில், மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, விசாரணை நிலுவையில் உள்ளது.
இந்த வழக்கை ரத்து செய்ய கோரி, சித்தராமையாவும், மற்ற காங்., தலைவர்களும் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
சில நாட்களுக்கு முன், மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், வழக்கை ரத்து செய்ய மறுத்து விட்டது. மேலும், போராட்டம் நடத்தி, மக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய சித்தராமையா, மாநில காங்., பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா உட்பட நான்கு தலைவர்களுக்கு தலா 10,000 ரூபாய் அபராதம் விதித்தது. இது மட்டுமின்றி, மார்ச் 6ல் மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றத்தில் ஆஜராகும்படி உத்தரவிட்டது.
உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, முதல்வர் சித்தராமையா, உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் மனு தாக்கல் செய்துள்ளார். இம்மனு விரைவில் விசாரணைக்கு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

