பேரிடர் தடுப்பு முன்னெச்சரிக்கை திட்டங்களுக்கு ரூ.3,027 கோடி நிதி ; உயர்மட்டக்குழு ஒப்புதல்
பேரிடர் தடுப்பு முன்னெச்சரிக்கை திட்டங்களுக்கு ரூ.3,027 கோடி நிதி ; உயர்மட்டக்குழு ஒப்புதல்
ADDED : ஜன 30, 2025 07:22 AM

புதுடில்லி: நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பேரிடர் தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள ரூ.3,027 கோடி ஒதுக்கீடு செய்து உயர்மட்டக்குழு ஒப்புதல் அளித்துள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் தலைமையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சவுகான் மற்றும் நிதி ஆயோக்கின் துணை தலைவர் ஆகியோர் அடங்கிய உயர்மட்டக்குழு கூட்டம் நடைபெற்றது. அப்போது, 10 மாநிலங்களில் மின்னல் தாக்கும் அபாயம் கொண்ட 50 பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளவும், 12 மாநிலங்களில் வறட்சி அதிகம் நிலவும் 49 பகுதிகளை மீட்டெடுக்கவும் தேசிய பேரிடர் மீட்பு நிதியில் இருந்து நிதி ஒதுக்குவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
அதன்படி, ஆந்திரா, பீஹார், ஜார்க்கண்ட், கர்நாடகா, மத்திய பிரதேசம், மஹாராஷ்டிரா, ஒடிசா, ராஜஸ்தான், தமிழகம், தெலங்கானா மற்றும் உத்தரபிரதேசம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் வறட்சியை தடுக்க ரூ.2,022.16 கோடி ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதில், ரூ.1,200 கோடி மத்திய அரசின் பங்காகும்.
அதேபோல், ஆந்திரா, பீஹார், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், மத்திய பிரதேசம், மேகாலயா, ஒடிசா, உத்தரபிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் போன்ற 10 மாநிலங்களில் மின்னல் பாதிப்புகளை தடுக்க ரூ.186.78 கோடி ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், 19 மாநிலங்களில் 144 வனப்பகுதிகளில் காட்டுத்தீ பரவாமல் இருக்க ரூ.818.92 கோடி ஒதுக்கீடு செய்ய உயர்மட்டக் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.