ADDED : ஏப் 17, 2025 09:37 PM
விக்ரம்நகர்:பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதற்காக உயர்மட்ட குழுவை மாநில அரசு அமைத்துள்ளது.
அண்மையில் முதல்வர் ரேகா குப்தா தாக்கல் செய்த பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார். பெரும்பாலான மத்திய அரசின் திட்டங்களும் மாநிலத்தில் செயல்படுத்தப்படுகின்றன.
மத்திய அரசின் நிதி பங்களிப்பை எதிர்பார்த்தே குடிநீர் வாரியம், பொதுப்பணித்துறை, பொதுப் போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு துறைகளில் புதிய அறிவிப்புகளை முதல்வர் வெளியிட்டிருந்தார்.
மத்திய அரசிடம் இருந்து துறைவாரியாக பெறப்படும் நிதியை மேலாண்மை செய்வதற்கு வசதியாக புதிதாக திட்டமிடல் துறையை மாநில அரசு அமைத்துள்ளது. இந்த துறை, மத்திய அரசின் நிதியை மேலாண்மை செய்வதுடன், திட்டங்கள் முறையாக செயல்படுத்துவதையும் கண்காணிக்கும்.
மத்திய அரசிடம் இருந்து நிதியை பெறுவது தொடர்பாக, பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட பல்வேறு திட்டங்களுக்கான கருத்துருக்கள், மதிப்பீடுகளைத் தயாரிக்குமாறு அனைத்து துறைகளுக்கும் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
திட்டங்கள், முன்மொழிவுகள், கருத்துரு, முதற்கட்ட மதிப்பீட்டை தயாரித்து அனைத்து துறைகளும் திட்டமிடல் துறையிடம் சமர்ப்பிக்கும். அவற்றை திட்டமிடல் துறை ஆராய்ந்து உயர் அதிகாரம் கொண்ட தொழில்நுட்பக் குழுவின் முன்வைக்கும்.
ஒன்பது பேர் உயர் அதிகாரம் கொண்ட கொண்ட குழுவில் தலைமைச் செயலர் தலைமையில் திட்டமிடல் துறை கூடுதல் தலைமைச் செயலர், பொதுப்பணித்துறை கூடுதல் தலைமைச் செயலர், நிதித்துறையின் கூடுதல் தலைமைச் செயலர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
குழுவால் இறுதி செய்யப்பட்ட திட்டங்கள், திட்டமிடல் துறையின் பொறுப்பையும் வைத்திருக்கும் முதல்வரின் ஒப்புதலுக்குப் பிறகு, நிதி பரிசீலனைக்காக சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சகத்திற்கு அனுப்பப்படும்.