'கித்வாய் மருத்துவமனையில் ஏழைகளுக்கு உயர்தர சிகிச்சை'
'கித்வாய் மருத்துவமனையில் ஏழைகளுக்கு உயர்தர சிகிச்சை'
ADDED : டிச 17, 2024 05:03 AM

பெலகாவி: ''கித்வாய் புற்று நோய் மருத்துவமனையில், ஏழை நோயாளிகளுக்கு உயர்தரமான சிகிச்சை கிடைக்கிறது. வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு, கைக்கெட்டும் கட்டணத்தில் சிகிச்சை அளிக்கப்படுகிறது, என மருத்துவ கல்வித்துறை அமைச்சர் சரண பிரகாஷ் பாட்டீல் தெரிவித்தார்.
மேல்சபை கேள்வி நேரத்தில், பா.ஜ., உறுப்பினர் நாகராஜுவின் கேள்விக்கு பதிலளித்து, அமைச்சர் சரண பிரகாஷ் பாட்டீல் கூறியதாவது:
கித்வாய் மருத்துவமனையில், வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள ஏழைகளுக்கு ஆயுஷ்மான் பாரத், ஆரோக்கிய கர்நாடகா என, வெவ்வேறு திட்டங்களின் கீழ், 5 லட்சம் ரூபாய் வரை, இலவச சிகிச்சை அளிக்கப்படுகிறது. வறுமை கோட்டுக்கு மேல் உள்ளவர்களுக்கு, கைக்கு எட்டும் கட்டணத்தில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
பொருளாதாரத்தில் பின் தங்கிய குடும்பத்தினருக்கு, ரோபோடிக் அறுவை சிகிச்சை, எலும்பு மாற்று சிகிச்சை போன்ற, உயர் தரமான சிகிச்சைகள், ஸ்கேனிங் வசதிகளும் இலவசமாக கிடைக்கின்றன. அரசு ஊழியர்களுக்கு ஜோதி சஞ்சீவினி திட்டத்தின் கீழ், புற்று நோய்க்கு இலவச சிகிச்சை அளிக்கப்படுகிறது.
'புனித் இதய ஜோதி' திட்டத்தின் கீழ், 16 மாவட்ட மருத்துவமனைகள், 70 தாலுகா மருத்துவமனைகளில், திடீர் மாரடைப்புக்கு சிகிச்சை அளிக்க மொத்தம் 86 உபகரணங்கள் வைக்கப்பட்டுள்ளன. மாநிலம் முழுதும் சிறுநீரக பிரச்னையால் அவதிப்படுவோருக்கு, 193 மையங்களில், 7623 டயாலிசிஸ் இயந்திரங்கள் வசதி செய்யப்பட்டுள்ளது.
மருத்துவமனைகளில் குடிநீர், கழிப்பறை, தரமான கட்டட வசதி என, அனைத்து அடிப்படை வசதிகள் செய்ய தேவையான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியில் பணிகள் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.