ஹிமாச்சல் பா.ஜ., - எம்.எல்.ஏ., மீது பாய்ந்தது போக்சோ வழக்கு
ஹிமாச்சல் பா.ஜ., - எம்.எல்.ஏ., மீது பாய்ந்தது போக்சோ வழக்கு
ADDED : நவ 08, 2025 11:53 PM

சிம்லா: ஹிமாச்சல பிரதேசத்தை சேர்ந்த இளம் பெண், தன்னை சிறுவயதில் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக, பா.ஜ., - எம்.எல்.ஏ., ஹன்ஸ் ராஜ் மீது புகார் அளித்த நிலையில், அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஹிமாச்சல பிரதேசத்தில், முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்குள்ள சம்பா மாவட்டத்தில் உள்ள சுரா சட்டசபை தொகுதியின் எம்.எல்.ஏ.,வாக பா.ஜ.,வைச் சேர்ந்த ஹன்ஸ் ராஜ், 42, உள்ளார்.
மூன்றாவது முறையாக எம்.எல்.ஏ.,வாக உள்ள இவர் மீது, 'பேஸ்புக்' சமூக வலைதளத்தில் பெண் ஒருவர் சமீபத்தில் புகார் தெரிவித்தார்.
அதில், 'நான் சிறுமியாக இருந்தபோது என்னை ஹன்ஸ் ராஜ் எம்.எல்.ஏ., மற்றும் அவரது உதவியாளர்கள் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தனர்.
'இது தொடர்பாக என்னிடம் ஆதாரங்கள் உள்ளன. இதுபற்றி வெளியே தெரிவித்தால், என் குடும்பத்தினரை கொன்று விடுவதாக மிரட்டினர்' என, குறிப்பிட்டிருந்தார்.
இது, சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதையடுத்து, 'என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை; அரசியல் உள்நோக்கம் கொண்டவை' என, ஹன்ஸ் ராஜ் எம்.எல்.ஏ., தெரிவித்தார்.
இதற்கிடையே, எம்.எல்.ஏ., மற்றும் அவரது உதவியாளர்கள் மீது அப்பெண்ணின் தந்தை போலீசில் புகார் அளித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த எம்.எம்.ஏ., உதவியாளர்கள், அந்த பெண்ணின் குடும்பத்தினரை கடத்தி கொலை மிரட்டல் விடுத்தனர்.
இதை தொடர்ந்து, எம்.எல்.ஏ., மற்றும் அவரது உதவியாளர்கள் மீது போக்சோ உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

