ஹிமாச்சலில் நிலவும் கடும் பனிப்பொழிவால் 1250 சாலைகள் மூடல்; சுற்றுலா பயணிகள் தவிப்பு
ஹிமாச்சலில் நிலவும் கடும் பனிப்பொழிவால் 1250 சாலைகள் மூடல்; சுற்றுலா பயணிகள் தவிப்பு
UPDATED : ஜன 27, 2026 06:21 PM
ADDED : ஜன 27, 2026 06:04 PM

சிம்லா: ஹிமாச்சல பிரதேசத்தில் கடும் பனிப்பொழிவு காரணமாக, 1250 சாலைகள் முற்றிலும் மூடப்பட்டு உள்ளன. அங்கு தற்காலிகமாக போக்குவரத்தும் நிறுத்தப்பட்டு உள்ளது.
முன் எப்போதும் இல்லாத அளவு ஹிமாச்சல பிரதேசத்தில் கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது. குளிர்கால சொர்க்கமாக மாறிவிட்டதாக கூறப்பட்டாலும், மணாலியில் ஏற்பட்ட போக்குவரத்து இடையூறுகள் சுற்றுலா பயணிகள் ,இடையே தவிப்பை உருவாக்கியது. பல கிலோமீட்டர் தூரத்திற்கு சாலைகளில் வாகனங்கள் அணிவகுத்து காட்சியளித்தன.
இந் நிலையில், அங்கு தொடர்ந்து பனி பெய்து கொண்டே இருப்பதால் சாலைகளில் போக்குவரத்தை தொடரமுடியாத சூழல் நிலவுகிறது. இதனால் அம்மாநிலத்தில் மட்டும் கிட்டத்தட்ட 1250 சாலைகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு, அவை மூடப்பட்டு உள்ளதாக பொதுப்பணித்துறை அமைச்சர் விக்ரமாதித்ய சிங் கூறி உள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது;
2 நாட்களாக பனிப்பொழிவு கடுமையாக இருக்கிறது. மாநிலம் முழுவதும் 1250 சாலைகள் மூடப்பட்டு உள்ளன. அவற்றை மீண்டும் திறக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தப்பட்டு பனி அகற்றப்பட்டு வருகிறது.
சுற்றுலா பயணிகள் பல இடங்களில் சிக்கித் தவித்து வருகின்றனர். அவர்களுக்கு உரிய வசதிகள் செய்து தர மாவட்ட நிர்வாகங்களுடன் பேசி வருகிறோம். இதுபோன்றதொரு வானிலையில் சிரமங்கள் இயற்கையானவையே. விரைவில் சாலைகளை சுத்தம் செய்து, போக்குவரத்திற்கு அனுமதிக்க முயற்சிக்கிறோம்.
இவ்வாறு அமைச்சர் விக்ரமாதித்ய சிங் கூறினார்.
சாலைகள் மூடப்பட்ட போதிலும், பனிப்பொழிவு அதிகம் இருந்தாலும் ஹிமாச்சல பிரதேசத்திற்கு நாள்தோறும் வரும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

