காஷ்மீரில் குளத்தை தோண்டிய போது ஹிந்து கடவுள் சிலைகள் கண்டெடுப்பு
காஷ்மீரில் குளத்தை தோண்டிய போது ஹிந்து கடவுள் சிலைகள் கண்டெடுப்பு
ADDED : ஆக 04, 2025 02:27 AM

அனந்த்நாக் : ஜம்மு - காஷ்மீரின் அனந்த்நாக் பகுதியில் குளத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டபோது, அங்கு புதைந்து கிடந்த 15 ஹிந்து கடவுள் சிலைகள் கண்டெடுக்கப்பட்டன.
ஜம்மு - காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள சாலியா பகுதியில் உள்ள குளத்தை புதுப்பிக்கும் பணியில், பொதுப்பணித்துறையினர் நேற்று முன்தினம் ஈடுபட்டனர்.
அப்போது ஒரு இடத்தை தோண்டியபோது, 11 சிவலிங்கங்கள் உட்பட 15 ஹிந்து கடவுள் சிலைகள் புதைந்து கிடப்பதை கண்டுபிடித்தனர்.
மேலும் உடைந்த நிலையில் சில சிலைகள் மீட்கப்பட்டன. இந்த சிலைகள் 2,000க்கும் மேற்பட்ட ஆண்டு பழமையானவை என தெரியவந்துள்ளது.
சிலைகள் கண்டெடுக்கப்பட்ட இடம் காஷ்மீரை ஆண்ட கார்கோடா வம்சத்தினர் மற்றும் காஷ்மீர் பண்டிட்களுக்கு தொடர்புடையது.
சிலைகளை மீட்ட பொதுப்பணித் துறையினர், இது குறித்து ஜம்மு- - காஷ்மீர் காப்பகங்கள், தொல்பொருள் மற்றும் அருங்காட்சியகத் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். சிலைகள் மற்றும் தோண்டப்பட்ட இடத்தை அவர்கள் பார்வையிட்டனர்.
மேலும் சிலைகளின் சரியான வயதை அறியும் சோதனைக்காக ஸ்ரீநகருக்கு அனுப்பப்படும் என தெரிவித்தனர்.
இந்த இடத்தில் முன்பு கோவில் இருந்திருக்கலாம் அல்லது சிலைகளை பாதுகாக்க இந்த இடத்தில் புதைத்து வைத்திருக்கலாம்.
எனவே இந்த இடத்தில் புதிய கோவில் கட்டப்பட்டு இந்த சிலைகளை தரிசனத்துக்கு வைக்க வேண்டும் என, காஷ்மீரி பண்டிட்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

