அலிகார் முஸ்லிம் பல்கலையில் ஹிந்து பேராசிரியைக்கு 27 ஆண்டுகளாக 'டார்ச்சர்'
அலிகார் முஸ்லிம் பல்கலையில் ஹிந்து பேராசிரியைக்கு 27 ஆண்டுகளாக 'டார்ச்சர்'
UPDATED : ஜன 10, 2026 01:44 AM
ADDED : ஜன 10, 2026 01:16 AM

அலிகார்: உத்தர பிரதேசத்தின் அலிகார் முஸ்லிம் பல்கலையில் ஹிந்து பேராசிரியை ஒருவருக்கு 27 ஆண்டாக மத ரீதியான துன்புறுத்தல் கொடுக்கப்பட்டதால், மன அழுத்தம் ஏற்பட்டதுடன் கருச்சிதைவுக்கும் ஆளான அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
உ.பி.,யின் அலிகார் மாவட்டத்தில், அலிகார் முஸ்லிம் மத்திய பல்கலை உள்ளது. இதில், கடந்த 27 ஆண்டுகளாக பேராசிரியையாக ரக்ஷனா கவுஷல் என்ற ஹிந்து பெண் பணியாற்றுகிறார்.
அரசியல் அறிவியல் துறை பேராசிரியையான ரக்ஷனா, 1998ல் இந்த பல்கலையில் பணியில் சேர்ந்தார்.
அப்போது முதல், அவரை சக பேராசிரியர்கள் மற்றும் தற்போது டீனாக உள்ள முகமது நபிஸ் அகமது அன்சாரி உள்ளிட்டோர் மத ரீதியிலான துன்புறுத்தலுக்கு ஆளாக்கி, இனப்பாகுபாடு காட்டியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து பேராசிரியை ரக்ஷனா கவுஷல் மேலும் கூறியதாவது:
நான் ஹிந்து என்பதால் சக ஊழியர்கள் என்னை குறிவைத்து மதரீதியாக துன்புறுத்தினர். இதனால் மன அழுத்தத்துக்கு ஆளானேன். என்னை துன்புறுத்தியவர்களின் பேச்சுக்களை ஆடியோவாக பதிவு செய்து அதை துணை வேந்தரிடம் புகாராக அளித்துள்ளேன்.
இது தொடர்பாக போலீசிலும் புகார் அளிக்க திட் டமிட்டுள்ளேன். என் மத அடையாளம் எனக்கு எதிராக திரும்பும் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை.
பல்கலையில் டீனாக பணியாற்றும் அன்சாரி, 'நீ ஒரு ஹிந்து; நீ இங்கு கற்பிக்க முடியாது. பனாரஸ் ஹிந்து பல்கலைக்கு போ' என, என்னை மிரட்டினார். கடந்த 2004ல் இரட்டை குழந்தை பெற்றெடுக்க கருவுற்றிருந்தேன்.
அப்போது எனக்கு அதிக பணி கொடுத்ததால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி கருச்சிதைவு ஏற்பட்டது.
இதற்கிடையே ஜவஹர்லால் நேரு பல்கலையில் பணியாற்றிய என் கணவர் பாண்டேயும் மரணம் அடைந்ததால் கடும் பாதிப்படைந்தேன்.
எப்போதாவது என் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து பணியாற்றுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

