ADDED : ஜன 06, 2024 07:03 AM

ஹுப்பள்ளி: ''ஹுப்பள்ளியில் ஹிந்து சேவகர் ஸ்ரீகாந்த் பூஜாரி கைது செய்யப்பட்டதில், மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷிக்கு தொடர்பு உள்ளது'' என, காங்கிரஸ் எம்.எல்.சி., ஜெகதீஷ் ஷெட்டர் குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
ஹுப்பள்ளியில் நேற்று அவர் அளித்த பேட்டி:
ஹிந்து சேவகர் ஸ்ரீகாந்த் பூஜாரி கைது செய்யப்பட்டதை வைத்து, பா.ஜ.,வினர் தேவையில்லாமல் அரசியல் செய்கின்றனர்.
இந்த வழக்கு 31 ஆண்டுகள் பழமையானது. பா.ஜ., ஆட்சியில் இருந்தபோது, வழக்கை தள்ளுபடி செய்திருக்கலாம். நான் 10 மாதங்கள் மட்டுமே, பா.ஜ., முதல்வராக இருந்தேன்.
ஹிந்து சேவகர் மீதான வழக்குகளை, வாபஸ் பெற முயற்சி செய்தேன்.
அப்போது உள்துறை அமைச்சராக இருந்த அசோக், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்போது எதிர்க்கட்சி தலைவராக இருப்பதால், அரசியல் நாடகம் ஆடுகிறார்.
ஸ்ரீகாந்த் பூஜாரி கைது செய்யப்பட்டதில் மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷிக்கும் தொடர்பு உள்ளது.
பா.ஜ., போராட்டம் நடத்துவது, தேர்தல் வித்தை.
அவர்கள் போராட்டத்தால் எதுவும் நடக்க போவது இல்லை. கலபுரகி பா.ஜ., பிரமுகர் மணிகாந்தா ரத்தோட் மீது, பல குற்ற வழக்குகள் உள்ளன.
அவருக்கு எதற்காக சட்டசபை தேர்தலில் 'சீட்' கொடுத்தனர். உணர்வுபூர்வமான பிரச்னையை முன்வைத்து, சட்டசபை தேர்தலை சந்தித்ததால், பா.ஜ., தோல்வி அடைந்தது. இன்னும் அவர்களுக்கு புத்தி வரவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.