ஹிந்து கோவில்களை தனியார் மயமாக்க கூடாது! அமைச்சரிடம் அர்ச்சகர்கள் கூட்டமைப்பு முறையீடு
ஹிந்து கோவில்களை தனியார் மயமாக்க கூடாது! அமைச்சரிடம் அர்ச்சகர்கள் கூட்டமைப்பு முறையீடு
ADDED : அக் 23, 2024 11:01 PM

பெங்களூரு: ''ஹிந்து அறநிலைய துறைக்கு உட்பட்ட கோவில்களை, தனியார் மயமாக்கக் கூடாது,'' என அரசுக்கு, அகில கர்நாடக ஹிந்து கோவில்களின் அர்ச்சகர்கள், ஆன்மிகவாதிகள் கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இக்கூட்டமைப்பு சார்பில் பெங்களூரில் நேற்று மாநாடு நடந்தது. மாநாட்டை அமைச்சர்கள் பரமேஸ்வர், ராமலிங்க ரெட்டி, தினேஷ் குண்டுராவ் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
கூட்டமைப்பு சார்பில், ஹிந்து அறநிலையத்துறை அமைச்சர் ராமலிங்கரெட்டியிடம் அளித்த மனுவில் குறிப்பிட்டு உள்ளதாவது:
அறநிலைய துறைக்குட்பட்ட கோவில்களின் நிதியை, 2023 சட்டம் மற்றும் விதிகளின்படி, ஹிந்து கோவில்களின் வளர்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்த முடியும். இந்த சட்டத்தின் கீழ், இப்பணத்தை மாற்றவோ அல்லது பெறவோ அரசுக்கு அனுமதியில்லை.
எக்காரணம் கொண்டும் அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோவில்களை, தனியாருக்கு வழங்கக் கூடாது. தனியார், கோவில்களை வணிக கண்ணோட்டத்தில் பார்க்கின்றனர்.
மதத்தை காப்பாற்றும், கடவுளுக்கு சேவை செய்கிறோம். எங்களுக்காக இதுவரை எந்த திட்டங்களையும் கொண்டுவர முயற்சிக்கவில்லை.
மாநிலத்தில் உள்ள ஹிந்து அறநிலைய துறைக்கு சொந்தமான 34,564 கோவில்களில், 34,166 கோவில்கள் 'சி' பிரிவில் உள்ள கோவில்களாகும். 2023 சட்டத்திற்கு கவர்னர் ஒப்புதல் அளித்தால், கோவில் வளர்ச்சிக்கு மட்டுமின்றி, அர்ச்சகர்களுக்கும் பயன் கிடைக்கும்.
ஏழை அர்ச்சகர்கள் குறித்து, இதுவரை யாரும் அக்கறை கொள்ளவில்லை.
கோவில் வளர்ச்சிக்கான சட்டத்துக்கு, கவர்னர் ஒப்புதல் அளிக்காதது, ஆயிரக்கணக்கான அர்ச்சர்ககள், ஊழியர்களை வேதனை அடைய வைத்துள்ளது.
ஹிந்துக்களை, நாங்கள் தான் காப்பாற்ற வந்தோம் என்று கூறுவதை பா.ஜ.,வினர் நிறுத்த வேண்டும்.
ஆதரவு அளிப்பதாக இருந்தால், இச்சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்க வைத்து, அர்ச்சகர்களுக்கு உதவ வேண்டும். மதம், கோவில்கள், பக்தர்களின் உணர்வுகளை அரசியலாக்கக் கூடாது.
இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தனர்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் ராமலிங்க ரெட்டி, 'இம்மசோதாவுக்கு, கவர்னர் விரைவில் கையெழுத்திடுவார் என்ற நம்பிக்கை உள்ளது' என்றார்.
மாநாட்டை துவக்கி வைத்த அமைச்சர்கள் பரமேஸ்வர், ராமலிங்க ரெட்டி, தினேஷ் குண்டுராவ் கவுரவிக்கப்பட்டனர்.

