ஹிந்துக்கள் வகுப்புவாதத்தில் ஈடுபடுவது கிடையாது: அசாம் முதல்வர்
ஹிந்துக்கள் வகுப்புவாதத்தில் ஈடுபடுவது கிடையாது: அசாம் முதல்வர்
ADDED : ஜூன் 23, 2024 05:15 PM

கவுகாத்தி: ‛‛ஹிந்துக்கள் வகுப்பு வாதத்தில் ஈடுபடுவது கிடையாது '' என அசாம் முதல்வர் ஹிமாண்டா பிஸ்வா சர்மா கூறியுள்ளார்.
லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்ற பா.ஜ., எம்.பி.,க்களுக்கு நடந்த பாராட்டு விழாவில் அவர் பேசியதாவது: தேர்தலில் ஆளுங்கட்சிக்கு 47 சதவீத ஓட்டுகள் கிடைத்தன. காங்கிரஸ் கூட்டணிக்கு 39 சதவீத ஓட்டுகள் கிடைத்தன. காங்கிரசுக்கு கிடைத்த ஓட்டுகள் மாநிலம் முழுவதும் கிடைக்கவில்லை. அக்கட்சிக்கு கிடைத்த ஓட்டுகளில் 50 சதவீதம் சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் 21 தொகுதிகளில் இருந்து கிடைத்தது. சிறுபான்மையினர் அதிகம் வசித்த பகுதிகளில் பா.ஜ.,வுக்கு 3 சதவீத ஓட்டுகள் மட்டுமே கிடைத்துள்ளன.
இதன் மூலம், ஹிந்துக்கள் வகுப்பு வாதத்தில் ஈடுபடுவது கிடையாது என்பது நிரூபணம் ஆகி உள்ளது. ஆனால், அதில் ஈடுபடுவது ஒரு மதத்தை சேர்ந்தவர்கள்; ஒரு சமுதாயத்தினர். வேறு எந்த மதத்தவரும் இத்தகைய செயலில் ஈடுபட்டதில்லை.
சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் மின்சாரம், சாலை கிடையாது. ஆனால், அவர்கள் காங்கிரசுக்கு ஓட்டளித்து உள்ளனர். ஆனால், அதற்கு மாறாக அசாம் மக்கள், பழங்குடியினருக்காக அசாம் அரசு உழைத்தது. இச்சமூகத்தினர் 100 சதவீதம் பேர் பா.ஜ.,வுக்கு ஓட்டளிக்கவில்லை.
கரீம்கன்ஜ் பகுதியைத் தவிர, வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் வசிக்கும் பகுதிகளில் 99 சதவீதம் பேர் காங்கிரசுக்கு ஓட்டளித்து உள்ளனர். பிரதமர் மோடி அளித்த வீடு, மின்சாரம் மற்றும் சுகாதார வசதிகள் மூலம் பலனடைந்த சிறுபான்மையினர் காங்கிரசுக்கு ஓட்டளித்து உள்ளனர். வங்கதேசத்தை சேர்ந்தவர்கள், அடுத்த 10 ஆண்டுகளில் மாநிலத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக காங்கிரசுக்கு ஓட்டளிக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.