ஹிந்துக்கள் ஆயுதம் வைத்திருங்கள்: பா.ஜ., தலைவர் சர்ச்சை பேச்சு
ஹிந்துக்கள் ஆயுதம் வைத்திருங்கள்: பா.ஜ., தலைவர் சர்ச்சை பேச்சு
ADDED : ஏப் 18, 2025 07:14 AM

கொல்கட்டா : “மேற்கு வங்கத்தில் வசிக்கும் ஹிந்துக்கள், தற்காப்புக்காக தங்கள் வீடுகளில் ஆயுதங்களை வைத்திருப்பது அவசியம்,” என, அம்மாநில பா.ஜ., மூத்த தலைவர் திலீப் கோஷ் தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு, வக்ப் திருத்தச் சட்டத்திற்கு எதிராக, வடக்கு 24 பர்கனாஸ் மாவட்டத்தின் முர்ஷிதாபாத் உட்பட சில இடங்களில் வன்முறை ஏற்பட்டது. இதில், ஹிந்துக்கள் மீது வன்முறையாளர்கள் தாக்குதல் நடத்தியதாக பா.ஜ.,வினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில், முர்ஷிதாபாத் வன்முறை சம்பவத்தை கண்டித்து சமீபத்தில் பா.ஜ., சார்பில் வடக்கு 24 பர்கனாஸ் பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பா.ஜ., மூத்தத் தலைவர் திலீப் கோஷ் பேசியதாவது:
ஹிந்துக்கள் தங்கள் வீடுகளில் டிவி, பிரிட்ஜ் உட்பட வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவர். ஆனால், இதுவரை தங்கள் வீடுகளுக்கு என எந்த ஆயுதத்தையும் வாங்கியது இல்லை.
தங்கள் பாதுகாப்புக்கு, போலீசை அழைப்பது வழக்கம். தற்போது, எந்த போலீசாரும் உங்களை காப்பாற்ற மாட்டார்கள். எனவே, தற்காப்புக்காக தங்கள் வீடுகளில் ஆயுதங்களை வைத்திருப்பது அவசியம். இவ்வாறு அவர் பேசினார்.
இதுதொடர்பான வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. திலீப் கோஷின் பேச்சுக்கு ஆளும் திரிணமுல் காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் முர்ஷிதாபாத் எம்.எல்.ஏ., ஹுமாயூன் கபீர் கூறுகையில், “பா.ஜ., தலைவரின் இந்தப் பேச்சு வெறுப்புணர்வை துாண்டும் வகையில் அமைந்துள்ளது. இது, இருதரப்புக்கும் இடையே வகுப்புவாத மோதலை உருவாக்கவே வழிவகை செய்யும்,” என்றார்.